55. ஆனந்த வல்லீ
ஐயத்துக்கு இருக்கையற்ற சிலவற்றை நினைவின் மேல் வரிசையில் எப்போதும் தூவி வைப்பது நல்லதென்று மாணாக்கர்களிடம் சொல்வேன். எறும்புகளுக்கு உணவிடுவதைப் போல அது அவசியமானது. கடக்கும்தோறும் அது பார்க்கும். தேவைக்கு ஏந்திச் செல்லும். சிலந்தி தனது வலைநூலைத் தானே பின்னிக்கொள்கிறது. அது அவசியத்தின் பொருட்டு நடக்கிறது. அவசியமற்ற பொழுதுகளில் அது தன் நூல் கண்டைத் தனக்குள் மறைத்துக்கொண்டுவிடுகிறது. பிருத்வி தனது மேற்புறத்தைத் தானேதான் பங்கிடுகிறது. நீருக்கொரு பகுதி. நிலத்துக்கொரு பகுதி. நிலத்திலேயே தருக்களுக்கும் செடி கொடிகளுக்கும் ஒரு பகுதி. அதன் தீர்மானம். அதன் வெளிப்பாடு. எண்ணிச் செய்வதில்லை. அது இயல்பு அல்லது இயற்கை. கேவலம், மனிதனின் ரோமங்கள் அவனைக் கேட்டுக்கொண்டா வளர்கின்றன? மனிதனால் முடிவதெல்லாம் மழிப்பது மட்டும்தான். எல்லாம் அதனதன் தாளகதியில் மிகச் சரியாகப் பொருந்தியே இருக்கின்றன. கால காலமாக, யுக யுகமாக இயற்கையின் சுருதி மாறாது ஒலிக்கிறது. உற்று கவனித்து உணர முடிந்தவன் பிரம்மத்தின் ரூபமற்ற சொரூபத்தைக் கண்டறிந்துவிடுகிறான்.
நான் அதர்வன். சரஸ்வதியின் ஈரம் படர்ந்த கரையில் நெடுநேரமாகத் தன்னந்தனியே அமர்ந்திருக்கிறேன். காற்று குளிர்ந்திருக்கிறது. நிலம் குளிர்ந்திருக்கிறது. சரஸ்வதி தண்மையைத் தனது ஆசியாகச் சொரிந்துகொண்டிருக்கிறாள். மித்ரனும் வருணனும் அர்யமானும் நன்மைகளின் சாமரம் கொண்டு புவியின்மீது வீசத் தொடங்கியிருக்கிறார்கள். நான் எங்கும் நிறைந்த விஷ்ணுவை வணங்குகிறேன். பிரம்மனை வணங்குகிறேன். வாயு தேவனைத் துதிக்கிறேன். அவன் பிரம்மத்தின் பிரத்யட்ச ரூபம். ரிதமும் சத்தியமும் அவனே ஆவான். நான் சத்தியத்தின் கனியை உண்கிறேன். அதன் விதையை என் சீடர்களின் சிந்தையில் தூவுகிறேன். செய்யும் யாகங்களின் பலனை மக்களுக்குப் பங்கிட்டுத் தருகிறேன். நிறைவென்றோ, நிறைவின்மை என்றோ ஒன்றை எப்போதும் உணர்ந்ததில்லை.
அங்கீரசன் ஒருமுறை சொன்னான்,
‘மகரிஷி, நீ மேலானவற்றின் ரசம் ப்ருத்வியெங்கும் நிரம்பித் ததும்பக் கனவு காண்கிறாய். சரஸ்வதியின் சூக்ஷ்மரூபம் உலக உயிர்கள் அனைத்தினுள்ளும் ஒடுங்கப் பிரயத்தனப்படுகிறாய். ஆனால் அது அசாத்தியமல்லவா? உலகு இருமைக்குட்பட்டது. விலக்கப்படவேண்டியதென்று நீயும் நானும் சொல்லிக்கொண்டிருந்தாலும் மாயை அல்லவா மனிதர்களைக் கட்டியாள்கிறது?’
Add Comment