33. கசப்பு மருந்து
ஒன்றோ, இரண்டோ, பலவோ, கடனோடு வாழ்வது இன்றைக்குப் பலருக்கு இயல்பாகிவிட்டது. குறைந்தபட்சம் ஒரு வீட்டுக் கடன், அப்புறம் வண்டிக் கடன், கல்விக் கடன், திருமணக் கடன் என்று நீளும் இந்தப் பட்டியலில் சுற்றுலாவுக்கு வாங்கிய கடன், புது மொபைல் ஃபோனுக்கான கடன், வீட்டில் பெரிய பொருட்களை வாங்கிய கடன், எதற்கு என்றே கணக்கில்லாத தனிநபர் கடன் (Personal Loan) போன்றவையும் சேர்ந்துகொண்டுவிட்டன.
இப்படிக் கடனோடு, அல்லது, கடன்களோடு வாழவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டவர்கள் தங்களுடைய நிதி மேலாண்மையில் மிகக் கவனமாக இருக்கவேண்டும். கையிலிருக்கும் அத்தனைக் கடன்களையும் முழுமையாகத் தீர்க்கும்வரை அவர்கள் ஒவ்வொரு ரூபாயையும் சிந்தித்துச் செலவழிக்கவேண்டியிருக்கும். இதனால், இவர்களைச் சுற்றியிருக்கிற மற்றவர்கள் மிக இயல்பாகச் செய்கிற பல விஷயங்களை இவர்களால் செய்ய இயலாது. அது உண்டாக்கும் மன அழுத்தம் மிகப் பெரியது.
எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு அலுவலகத்தில் தீபாவளி போனஸ் என்று ஒரு லட்ச ரூபாய் தருகிறார்கள். அவர் அதில் பாதியை மகிழ்ச்சியாகச் செலவழித்துவிட்டு மீதியைச் சேமித்துவைக்கிறார்.
அவருடன் பணிபுரிகிற இன்னொருவருக்கும் அதே ஒரு லட்சம் போனஸ் கிடைக்கிறது. ஆனால், அவருக்குச் சில பெரிய கடன்கள் இருப்பதால் அவர் அந்தத் தொகையின் பெரும்பகுதியை அந்தக் கடன்களைத் திருப்பி அடைக்கச் செலவழித்துவிடுகிறார். நன்கு வேலை செய்து போனஸ் வாங்கியும் அதை விருப்பம்போல் செலவழிக்க இயலவில்லையே என்று அவருடைய மனம் வருந்துகிறது.
Add Comment