58. சாட்சி பூதம்
தினமும் துயிலெழுந்ததும் நதியைப் பார்க்கிறேன். சரஸ்வதி மாறவில்லை. அதன் ஆழமோ அடர்த்தியோ அலையடிப்போ சுருதியோ மாற்றம் கண்டதாகப் புலப்பட்டதில்லை. நதியினின்று பார்வையை உயர்த்தி வானைப் பார்க்கிறேன். அதுவும் மாறவில்லை. மித்ரன் மாறாதிருக்கிறான். வருணன் தனது கர்த்தவ்யம் தவறுவதில்லை. தாவரங்களின் பசுமை, பிருத்வியின் சாந்தம், இரவின் சமத்துவம், அக்னியின் சுபாவம் எதுவுமே காலம் கணக்கிட முடியாக் காலம் தொட்டுத் தமது குணம் மாற்றிக் கொள்ள எண்ணியதில்லை. பட்சிகளும் மிருகங்களும்கூடத் தமது இயல்பின் அச்சிலிருந்து விலகுவதில்லை. மனித குலம் மட்டும் ஒவ்வொரு நாளும் மாற்றம் காண்பது விசித்திரமாக இருக்கிறது.
நான் அதர்வன். என் தினசரி தியானத்தின் பருப்பொருள் எப்போதும் இதுவாகவே இருக்கின்றது. நான் வகுப்பவனல்லன். பகுப்பவனுமல்லன். ஒரு சஞ்சாரியாகச் சில காலம் புவியின்மீது இருந்து செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தே இருக்கிறேன். என் கடமைகளில் நான் தவறுவதில்லை. என் தர்மமென்று கொண்டதை மீறியதில்லை. எனக்குத் தொடர்பற்றவை என்று உணர்ந்த எதனையும் பின்தொடர்ந்ததில்லை. காணா ஒளியினுக்கு அப்பால் ஒன்றனை நம்பியதுமில்லை.
ஆனால் ஏனோ சில காலமாக நடக்கிற சம்பவங்களின் சுருதி பிசகி ஒலிக்கிறது. இதுவும் எதுவும் சரியில்லாதது போன்ற தோற்றம் அல்லது தோற்ற மயக்கம் உண்டாகிக் களைப்பாக்குகிறது. என் தவமும் புண்ணியங்களும் இம்மண்ணும் மக்களும் உரிமைகொண்டு அனுபவிப்பதற்கானவையென்று தெய்வங்களிடம் என்றோ தெரிவித்துவிட்டேன். இரட்டை யோனிகளின் வழி உட்புகுந்து ஒற்றை யோனி வழி வெளிப்பட்ட மந்திரங்களையும் அவற்றின் பொருளையும் பிசிறின்றி ஏழு தலைமுறைகளுக்கு போதித்து அனுப்பியிருக்கிறேன். மீதமிருக்கும் நாள்களிலும் அந்தப் பணி தடைபடப் போவதில்லை.
ஆனாலும் ஒரு நிறைவின்மை நெருடிக்கொண்டிருந்தது. விக்னங்களின்றிக் கிராத குலத்து சாரன் என் இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்ட நிம்மதியுணர்வு ஒருபுறம் இருந்தாலும், அவனது இலக்கு பூர்த்தியடைவதற்குள் நான் மேற்கொண்ட காரியங்கள் சிதறிவிடாதிருக்க வேண்டும் என்று தோன்றியது.
Add Comment