Home » சலம் – 59
சலம் நாள்தோறும்

சலம் – 59

59. தாய்

தெய்வங்களினும் ஒரு மனிதன் உயர்ந்தவனாக இருப்பான் என்று நான் எண்ணிப் பார்த்ததில்லை. அப்படி எனக்குத் தோன்றுவது ஒரு பெரும் பாவமாகவும் இருக்கலாம். தெய்வங்களின் உலகில் பிழைகளும் பிசிறுகளும் மிகுந்தோர் யாருமில்லை. பாவம் புரிந்தவர்கள் தெய்வமாக இயலாது. தெய்வமான பின்பு பாவத்தின் நிழலும் நினைவில் படிய வாய்ப்பில்லை. அவரவருக்கு வரையறுக்கப்பட்ட தருமங்களில் இருந்து இம்மியும் பிசகாமல்தான் இயங்கிக்கொண்டிருப்பார்கள். ஆனால் என்ன. தெய்வங்கள் சிந்திக்கும். தெய்வங்கள் சுவாசிக்கும். தெய்வங்களுக்கு உணர்ச்சிகளுண்டு. நான் தெய்வமாகிவிட்ட காமாயினி. வாழ்ந்த காலத்தில் என் மகனை என்னால் சற்றும் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. இருவரும் சொல்லிக்கொள்ளாமலேயே வேறு வேறு உலகங்களில் வசித்துப் பிரிந்திருக்கிறோம். இறந்தபின் தவமிருந்து, அதன் பயனாக இந்நிலைக்கு வந்தபின்பு பெரும்பாலும் அவனைப் பற்றிச் சிந்திப்பதை நான் தவிர்த்துவிடுகிறேன். ஆனால் மகரிஷியை எண்ணாதிருப்பதில்லை. வித்ருவில் வசிக்கும் சூத்திர குலத்து மக்களுக்கு என்னைக் குடையாக்கியிருக்கிறது இந்த வாழ்க்கை. நான் அவர்களோடிருக்கிறேன். அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்கிறேன். நல்லறத்துக்குட்பட்ட ஒவ்வொரு வேண்டுதலையும் நிறைவேற்றித் தருகிறேன். ஒவ்வொரு செயலின்போதும் இதனை மகரிஷி எப்படிச் செய்வார் என்று எண்ணிப் பார்த்துக்கொள்கிறேன். அப்போதும் தோன்றும். ஒரு தெய்வம் இதனை இப்படிச் செய்யலாமா? கூடாது என்று எனக்குச் சொல்லப்படவில்லை. எனவே நான் பிழைபட்டில்லை என்று எண்ணிக்கொண்டுவிடுகிறேன்.

அந்தச் சாரனைக் குத்சனிடமிருந்து பிரித்துவிட வேண்டும் என்று நான் விரும்பினேன். அது உண்மை. நான் ரிதம் அறிந்தவள். எது நடக்கும் என்று நன்றாகத் தெரியும். குத்சனின் சாபம் பலித்தே தீருமென்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், தெய்வமானாலும் பெண்ணல்லவா. தவிர, சபித்தவனின் தாயாக இருந்தவள் என்கிற உறுத்தல் தெய்வமான பின்பும் உள்ளதென்றால் தெய்வங்களும் உணர்ச்சிகளுக்கு உட்பட்டவைதான். உணர்ச்சி பிழையல்ல. அதுவே உணவும் மூச்சுமாகிவிடாதிருக்க வேண்டும் என்று அவ்வப்போது எண்ணிக்கொள்வேன். என் வியப்பெல்லாம், எனது அந்தச் சிறியதொரு விருப்பத்தையும் குத்சன் நிறைவேற விடாமல் செய்துவிட்டது பற்றித்தான். சாரனைக் காப்பாற்ற அவன் அமைத்த மாயத் திரையைக் கண்டு உண்மையில் நான் அதிர்ந்து போனேன். அது அவன் புரிந்த தவத்தின் பலனில் பெரும்பகுதியை விழுங்கி விரிந்த திரை. பாடுபட்டு வரம் பெற்ற எந்த முனியும் ஒரு நரனுக்காக அவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்ய மாட்டான். குத்சன் செய்தான். அந்த ஒரு செயலில் அவன் ஆஹுதியிட்ட தவப் பலனைத் திரும்பப் பெற வேண்டுமானால் ஆகக் குறைந்தது அவன் இன்னும் பத்து சம்வத்சரங்களுக்கேனும் தவம் செய்தாக வேண்டும்.

தனது லட்சியத்தில் அவனுக்கு இருந்த உறுதியும் கூர்ந்த கவனமும் நியாயமாக எனக்குத் திகைப்பினைத்தான் உண்டாக்கியிருக்க வேண்டும். ஆனால் அது அச்சமளித்தது. ஒரு தெய்வம் அச்சமுறும் அளவுக்கு ஒரு நரனின் செயல்பாடு இருக்குமானால் உடனே அதை முடக்கிவிட வேண்டுமென்பது எங்களுக்கு உள்ள கடமை. சாரனின் மனத்துக்குள் நுழைய முடிந்த என்னால் என் மகனின் மனத்தைத் திறக்க முடியாதா? அவன் என் குரலைக் கேட்டு எத்தனையோ காலமாகிவிட்டது. இப்போது நான் அவனைப் பெயர் சொல்லி அழைத்தால் போதாதா? ஒரு சொல் போதும். ஒரு கட்டளை போதும். அவனது செயலைச் சிதறடித்துவிட முடியும்.

ஆனால் என்னால் அதனைச் செய்ய முடியாது. எக்காலத்திலும் என் மகனை நான் தொடர்புகொள்ள மாட்டேன் என்பது தெய்வமானபோது நான் ஏற்ற விரதம். என் சொல்லில் நான் நின்றாக வேண்டும். அது என் தருமம். அதனால்தான் நான் சாரனின் மனத்துக்குள் வந்தேன். அவன் அறியாத பெண் தெய்வம். அவன் பார்த்திராத வடிவம். அவனுக்கு அவசியமே இல்லாத ஏதோ ஒன்று. ஆனால் அவனிடமும் நான் தோற்றுத்தான் போனேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!