60. வந்தே மாதரம்
காந்திக்கு YMCA நடத்திய பாராட்டுக் கூட்டம், பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய புகழ் பெற்ற ‘வந்தே மாதரம்’ பாடலுடன் தொடங்கியது.
‘வந்தே மாதரம்’ (தாயே, உங்களை வணங்குகிறேன்) என்பது காந்திக்கு மிகவும் பிடித்த வரி. தான் எழுதிய பல கடிதங்களின் கீழ்ப்பகுதியில் அவர் ‘வந்தே மாதரம்’ என்று எழுதிக் கையொப்பமிட்டிருக்கிறார்.
அதே நேரம், அந்த அழகிய பாடலில் கவிஞர் விவரிக்கிற உயர்வான இந்தியாவில்தான் நாம் இப்போது இருக்கிறோமா என்கிற ஐயமும் காந்திக்கு உண்டு. ‘வந்தே மாதரம்’ பாடித் தன்னை வரவேற்ற மாணவர்களிடம் அவர் இதை விளக்கினார்:
‘இந்தப் பாடலில் கவிஞர் இந்திய அன்னையை மிகச் சிறப்பான அடைமொழிகளைப் பயன்படுத்திப் புகழ்கிறார். நறுமணம் மிக்க நாடு, இனிமையாகப் பேசும் நாடு, ஆற்றல் மிகுந்த நாடு, நல்ல நாடு, உண்மையான நாடு, பாலும் தேனும் ஓடுகின்ற நாடு, கதிர்களும் பழங்களும் செழித்து விளையும் வயல்களைக் கொண்ட நாடு, பொற்கால மனிதர்களைக் கொண்ட நாடு… அவர் சொல்லும் இந்த நாடு ஒட்டுமொத்த உலகத்தையும், ஒட்டுமொத்த மனித குலத்தையும் வெல்லக்கூடியது, ஆயுதத்தால் இல்லை, ஆன்ம ஆற்றலால்.’
‘ஆனால், அப்படி ஒரு நாடு இப்போது இருக்கிறதா? அல்லது, கவிஞர் தொலைநோக்கில் பார்த்துச் சொல்லியிருக்கிற அந்த உயர்ந்த நாட்டை நீங்களும் நானும்தான் உருவாக்கவேண்டுமா?’
Add Comment