133. நாற்காலி ஆசை
ஜவஹர்லால் நேருவின் மரணம், சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியாக முக்கியத்துவம் பெற்றது.
பதவியில் இருக்கும்போதே மறைந்த இந்தியப் பிரதமரது இறுதி ஊர்வலத்தை அரசு மரியாதையுடன் ஏற்பாடு செய்யும் பொறுப்பு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. சுதந்திர இந்தியாவில் மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலத்திற்குப் பிறகு அரசு மரியாதையுடன் நடைபெறும் இரண்டாவது இறுதி ஊர்வலம் இதுதான்.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்து குவிந்துகொண்டிருந்த மக்கள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி அமைதியாக இறுதி ஊர்வலத்தை நடத்தி முடிப்பதற்குத் தேவையான அளவுக்கு இராணுவப் படையினர் டெல்லியில் இல்லை. நிலைமையை சமாளிக்க மீரட்டிலிருந்து கூடுதலாகப் படைவீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அடுத்த நாள், மே 28 அன்று, மதியம் 1.20 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. நேருவின் உடலைச் சுமந்து சென்ற வாகனத்தைப் பின்தொடர்ந்து சாரிசாரியாக மக்கள் கூட்டம் சென்றது.
Add Comment