இந்தியாவில் உள்ளதைப் போன்ற மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை முறையைத் தங்கள் நாட்டிலும் வடிமைத்துகொள்வதற்காக, இந்தியத் தேசியக் கொடுப்பனவு நிறுவனத்துடன் டிரினிடாட் அமைச்சகம் ஒப்பந்தம் போட்டுள்ளது. மின்னிலக்கப் பணப்பரிவர்த்தனை முறையை அமல்படுத்தப்போகும் முதல் கரீபிய தேசம் இதுதான். கரீபிய பகுதியின் தென்கோடி தீவு தேசம். இங்கே இந்திய வம்சாவளி மக்கள் அதிகம் வசிக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். கயானாவின் எல் டோரடோ (தங்க நகரம்) கண்டுபிடிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்த தீவு எப்படிப் பல நாட்டுக் குடியேற்றங்களைக் கொண்டு வளர்ந்து வந்தது என்பது தனிக்கதை.
கயானாவில் மனிதக் குடியேற்றங்கள் வருவதற்கெல்லாம் முன்பே டிரினிடாட் – டொபாகோ தீவுகள் வெதுவெதுப்பான சீதோசனம் கொண்ட சொர்கபூமியாக இருந்தது. 1498 ஆம் ஆண்டு கொலம்பஸ் ஸ்பானியக் குழுவினருடன் உலகத்தைச் சுற்றும் மூன்றாவது பெரும் பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்கு நேரடியான கடல் மார்க்கத்தைக் கண்டடைய வேண்டுமென்ற முயற்சிகளில் தோற்றிருந்தாலும், மூன்று மலைக்குன்றுகள் சங்கமிக்கும் அந்த சிறு தீவைக் கண்டதில் கொலம்பஸிற்கு மகிழ்ச்சி தான். அதற்கு உடனேயே ‘லா டிரினைட்’ எனப் பெயரும் சூட்டினார். அது தான் இப்போது டிரினிடாட்.
டிரினிடாட் – டொபாகோ, இரண்டு சற்றே பெரிய தீவுகளுடன் சேர்த்து அருகே இருக்கும் சிறிய சில தீவுகளையும் உள்ளடக்கிய இரட்டைத் தீவு தேசம். ஐந்தாயிரத்துச் சொச்சம் சதுர கிலோமீட்டர்கள் கொண்ட நிலப்பரப்பு. மலைப் பிரதேசங்கள் – சம தளம் என இரண்டும் அங்கு உண்டு. வெனிசுலாவுக்கு மிக மிக அருகில் அமைந்துள்ளது. 1592 வாக்கில் தான் அங்கு ஸ்பானியக் குடியேற்றங்கள் தொடங்கின.
Add Comment