iv. சீனா
உயிரைத் துச்சமாக மதித்து எதிரியுடன் சண்டையிட ஆயத்தமாக இருக்கும் வீரர்களிடம் சண்டைக்கலைப் பயிற்சி இருப்பது இயல்பு. இந்த இயல்புக்கு மாறாக, அமைதியைப் போதிக்கும் துறவிகளிடமிருந்து ஷாவோலின் குங்ஃபூ என்னும் ஒரு சண்டைக்கலை உருவானது. அது இன்றைக்கு உலகப் புகழ் பெற்று எல்லா நாட்டிலும் பரவி நிற்கிறது. போதிதர்மர் சீனாவுக்குச் சென்று அங்கு தங்கி, ஏறத்தாழ கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் அவரால் பயிற்றுவிக்கப்பட்ட கலை ஷாவோலின் குங்ஃபூ. வெளிநாட்டிலிருந்து சீனாவுக்குள் வந்து அவரால் ஷாவோலின் குங்ஃபூ பயிற்றுவிக்கப்பட்ட அந்தக் காலகட்டத்திலும் அதற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பும் சீன மண்ணில் பல குங்ஃபூ சண்டைக்கலைகள் இருந்தன.
அவற்றுள் முக்கியமானவையாக இரண்டு வகை குங்ஃபூ சண்டைக்கலைகள் உள்ளன. கி.மு. 17ம் நூற்றாண்டு முதல் 10ம் நூற்றாண்டு வரையிலும் இவை பயிற்சி செய்யப்பட்டன. ஆனால், அவற்றைப் பொதுமக்கள் கற்கவில்லை. கி.மு. எட்டாம் நூற்றாண்டிலும் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலும் ஷாவோலின் ஆலயத்தினர் குங்ஃபூ உத்திகளால் போரிட்டனர்.
முதலில் கொள்ளையரிடமிருந்து ஆலயத்தைக் காக்க சண்டையிட்டனர். பின்னர் அரசியல் தொடர்பான உள்நாட்டுக் கலவரங்களின் போது அவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள குங்ஃபூ உத்திகளால் சண்டையிட்டனர். ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் குங்ஃபூவைப் பொதுமக்களும் கற்கலாம் எனத் தத்துவ அறிஞர் கன்ஃபூஷியஸ் மன்னருக்கு தந்த ஆலோசனை ஏற்கப்பட்டது. குங்ஃபூவைப் பொதுமக்களும் கற்கத் தொடங்கினர். அதன் பின்னர்தான் குங்ஃபூ சீனப் பொதுமக்களிடமும் பரவியது.
தொடர்ந்த பரவலாக்கமும், பயிற்சியும் குங்ஃபூவை நவீனப்படுத்தின. குங்ஃபூவிலிருந்து கிளைகள் தோன்றி அவை வெவ்வேறு பெயர் கொண்ட சண்டைக்கலைகளாகப் பரவின. புலி, கொக்கு, சிறுத்தை, பாம்பு, டிராகன். இந்த ஐந்து விலங்குகளின் நிற்றல் நிலை, தாக்கும் முறை ஆகியவற்றை சண்டைக்கலை உத்திகளாகக் கொண்டு ஒருவகை குங்ஃபூ உருவானது. ‘ஐவகை விலங்கு’ என்னும் பெயருடன் அது பயிற்சி பெறப்படுகிறது.
Add Comment