62. மாயவரத்தில் மகாத்மா
ஏப்ரல் 29 அன்று, சென்னை தம்புச்செட்டித் தெருவில் உள்ள இலட்சுமி நினைவு ஆர்ய பாடசாலை என்ற பள்ளிக்குக் காந்தியும் கஸ்தூரிபா-வும் வந்தார்கள். அந்தப் பள்ளிக்குக் கொடையளித்து நடத்திவந்த சி. இராமாஞம் செட்டியாரும், ஜார்ஜ் டவுன் பகுதிப் பள்ளிகளின் துணைக் கண்காணிப்பாளரான என். சுவாமிநாத ஐயரும் அவர்களுக்கு அந்தப் பள்ளியைச் சுற்றிக்காண்பித்தார்கள். அதன்பிறகு, வீணை, வாய்ப்பாட்டுக் கச்சேரிகள் நடைபெற்றன.
அதே நாளில், ராயப்பேட்டையில் உள்ள லாட் கோவிந்ததாஸ் என்பவருடைய வீட்டில் குஜராத்தி மக்கள் காந்திக்கு வரவேற்பளித்தார்கள், ‘நீங்கள் குஜராத்தைச் சேர்ந்தவர் என்பது எங்களுடைய பெருமை’ என்று வாழ்த்தினார்கள், அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் காந்திக்கு வழங்கப்பட்ட வரவேற்புரையும் அவரைப் புகழ்ந்து பாடப்பட்ட சில பாடல்களும் குஜராத்தி மொழியில் அமைந்திருந்தன. காந்தியும் குஜராத்தி மொழியில்தான் ஏற்புரை நிகழ்த்தினார், ‘குஜராத்திகளின் நலன் என்று எதையும் பிரித்துப் பார்க்காதீர்கள். சென்னையில் உள்ள எல்லாருடைய நலன்தான் உங்களுடைய நலன். அதனால், நீங்கள் எல்லாத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றவேண்டும்!’
குஜராத்திலிருந்து நெடுந்தொலைவில் உள்ள சென்னையில் குஜராத்தி மொழி பேசுகிறவர்கள் இத்தனைப் பேர் வாழ்கிறார்களா என்பது காந்திக்கு மிகவும் வியப்பளித்தது. தங்கள் மாகாணத்தில் இத்தனைக் குஜராத்தியர்களை ஏற்றுக்கொண்டு காத்துவருகிற சென்னை மக்களுக்கு நன்றி தெரிவித்தார் அவர்.
Add Comment