34. மதிப்பைக் கூட்டும் மதிப்பெண்
பெரியவர்கள் சிறுவர்களை வாழ்த்தும்போது, ‘நாலு பேர்கிட்ட நல்ல பேர் வாங்கணும்’ என்பார்கள். இதன் பொருள், ஊருக்குள் யாராவது நம்மைப்பற்றி விசாரித்தால் அவர்கள் நல்லவிதமாகப் பேசவேண்டும், ‘அவர் நல்லவர், நீங்கள் அவரோடு பழகலாம்’ என்று மனமாரப் பரிந்துரைக்கவேண்டும். அப்போதுதான் வாடகைக்கு வீடு கிடைப்பதில் தொடங்கித் திருமணம், வேலை, சொந்தத் தொழில் என்று எல்லாம் நிறைவேறும்.
கடன் வாங்குவதைப் பொறுத்தவரை, நாலு பேரிடம் நல்ல பேர் வாங்கினால் போதாது. ‘இவர் வாங்கிய கடனை முறையாகத் திருப்பிச் செலுத்திவிடுவார்’ என்று ஊரிலிருக்கிற எல்லாரிடமும் (அதாவது, எல்லா வங்கிகள், நிதி நிறுவனங்களிடமும்) நல்ல பேர் வாங்கவேண்டும். இவர்களில் ஒரே ஒருவரிடம் கெட்ட பெயர் வாங்கினால்கூட வருங்காலத்தில் நமக்குக் கடன் கிடைப்பது சற்றுச் சிக்கலாகிவிடும்.
உண்மையில், கடன் வாங்குகிற, அதைத் திருப்பிச் செலுத்துகிற விஷயத்தில் நாம் எவ்வளவு ‘ஒழுங்கானவர்கள்’ என்பதைச் சுட்டிக்காட்டுகிற ஒரு குறியீடுகூட இருக்கிறது. அதன் பெயர், CIBIL மதிப்பெண்.
Add Comment