63. உதிர்த்தவன்
இன்னொரு மனிதனின் மூச்சுக் காற்று இல்லாத இடத்தில் இருப்பதே அத்தருணத்தில் என் மனநிலைக்குச் சரியென்று தோன்றியது.
அதன் பொருட்டே சாரன் வித்ருவுக்குப் புறப்பட்டுச் சென்ற பிறகு ருத்ர மேருவுக்கு வந்தேன். எனக்குத் தெரியும். இடையூறுகளற்ற தவத்தின் பொருட்டு ரிஷிகள் அங்கே வருவார்கள். சிறிய குன்றே என்றாலும் நாற்புறமும் மனித நடமாட்டம் இல்லாதிருப்பது தவம் இருப்போருக்கு அளப்பரிய சௌகரியம். தவிர, குன்றின் ஒரு புறமாக சர்சுதி அரவணைத்து வளைந்து செல்வதையேகூட தியானப் பொருளாக்கலாம். எனக்கு அம்மேருவும் அதனை வருடி ஓடும் சர்சுதியும் இடுப்பில் நழுவும் மதலை ஏந்திய தாயின் சொரூபமாகவே எப்போதும் தோன்றும். கொந்தளிப்பின் தகிக்கும் பெருவெளியில் தத்தளித்துக்கொண்டிருந்தபோது எனக்கு அப்படியொரு ஏந்தும் கரம் அவசியமென்று தோன்றியது.
சிறிய, மிகச் சிறிய பிராயத்தில் என் தாயின் இடுப்பில் இருந்தபடி பரியின்மீது பயணம் செய்து வித்ருவுக்கு வந்து சேர்ந்த காட்சி நான் இருக்கும்வரை என் நினைவில் இருக்கும். பிழைப்பு ஒன்றுதான் அன்றைக்கு என்னைப் பெற்றவர்களின் இலக்காக இருந்தது. இறுதி வரையிலுமே அவர்கள் அப்படித்தான் இருந்துவிட்டுப் போனார்கள். நானும் அப்படி இருந்திருக்கலாம். என் தாய் விரும்பிய வண்ணம் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து விவாகம் செய்துகொண்டு, என் தகப்பன் விரும்பிய வண்ணம் அவனைப் பாட்டனாக்கி மகிழ்வித்து, வாழ்வெல்லாம் பசுக்களை மேய்த்து, பால் கறந்து கொடுத்துவிட்டு, நொடித்து விழுந்து புறப்பட்டுச் சென்றிருக்கலாம்.
எண்ணிப் பார்த்தால், நான் வேறொருவனானதற்கும் எனக்கும் தொடர்பே இல்லை என்றுதான் அப்போதும் தோன்றியது. நான் மறக்கவில்லை. ஏழு மந்திரங்கள் என் வழியாக வெளிப்பட்டிருக்கின்றன. அதர்வனுடனும் மற்ற ரிஷிகளுடனும் ஒப்பிட்டால் அது ஒன்றுமில்லை. ஆனால், அவை வெளிப்படுவதற்கு என்னை ஒரு யோனியாகத் தேர்ந்தெடுத்த பிரம்மம் அதற்கொரு நியாயத்தை நிச்சயமாகக் கொண்டிருக்கும். அந்நியாயத்தின் வாயிலை அதர்வன் அடைத்தான். இது அத்துமீறல் அல்லவா? தரும விரோதமல்லவா?
அதர்வன் என்னும் தனி நபரல்ல என் ஆவேசத்தின் ஊற்றுக்கண். நிழலுக்கு நெருங்கும் எளிய உயிரினங்களின் குரல்வளையை நொறுக்கிச் சாகடித்துக் கபாலத்தைப் பிளந்து உதிரம் உறிஞ்சிக் குடிக்கும் ராட்சத அதிகார மாயத் தருவின் வேரை அசைத்துப் பெயர்க்க நினைத்ததன் விளைவாகத்தான் அவனைச் சபித்தேன்.
Add Comment