65. விபூதி யோகம்
வானுக்கும் பிருத்விக்கும் இடைப்பட்ட வெளியினைப் போல மனம், இருப்பது தெரியாதிருக்க வேண்டும். சூனியமல்ல. பேரொளியுமல்ல. உள்ளபடியே இருப்பது. அப்படித்தான் அது இருக்க வேண்டுமென்று எப்போதும் நினைப்பேன். தியானத்தில் அமரும்போது எண்ணியவண்ணம் மனத்தைக் குவித்துவிட்டுப் பிறகு எண்திசைக்கும் பறக்க விடுவதில் பயனில்லை. சிந்தனை ஓடிக்கொண்டுதான் இருக்கும். அதைத் தவிர்க்க இயலாது. ஆனால் அது ஒரு நதியின் ஓட்டமாக அல்லாமல் மதுவின் ஒழுக்கினைப் போல் இருக்க முடிந்துவிட்டால் போதும். என் மாணாக்கர்களுக்கு இதனை ஓர் அப்யாசமாக்கி ஒவ்வொரு நாளும் அதற்கொரு நேரம் ஒதுக்கித் தந்து எண்ணங்களின் ஓட்டத்தைக் கண்காணிக்கச் சொல்வேன். ‘நீங்கள் இப்போது தியானத்தில் இல்லை. மாறாக என் இடத்தில் அமர்ந்துகொண்டு உங்கள் எண்ணங்களைக் கண்காணிக்கிறீர்கள் என்று எண்ணிக்கொண்டு எண்ண ஓட்டத்தை, அதன் வேகத்துக்குச் சமமான சொற்களில் உச்சரித்துக்கொண்டே இருங்கள்’ என்று சொல்வேன்.
அவர்கள் நிதானமாகத்தான் ஆரம்பிப்பார்கள். ஏதோ ஒரு கணத்தில் சொல் வேகம் கண்டுவிடும். சட்டென்று உக்கிரமாகும். குளிர்ந்து உறையும். பூச்சி அரித்த மரத்தினைப் போல உதிர்த்துக்கொட்டும். இழுத்துப் பிடித்து ஒழுங்காக்கப் பார்ப்பார்கள். இப்போது மொழி தடுமாறும். ஆடும். தடுக்கி விழும். மீண்டும் எழுந்து ஓடத் தொடங்கும். அடித்து நிறுத்தி நடக்க வைப்பார்கள். ஒரு மிருகத்தினைப் பழக்குவது போலத்தான் சிந்தையைப் பழக்கியாக வேண்டும். மனிதனுக்கு வேறு வழியில்லை. ஆனால் அது அவசியம். செய்யாவிட்டால் இழப்புகளைத் தவிர்க்க இயலாது போகும்.
ஆனால், உணர்ச்சிகளை அடியோடு தவிர்க்கத் தெரிந்தவனுக்கும் சித்தம் சற்று அசைந்துகொடுக்கும் என்பது எனக்குத் தெரியாது. இதுவரை எனக்கு அப்படி நேர்ந்ததில்லை. இப்போது சில காலமாகச் சற்று சாம்பர் பூசிக் கலைகிறது. இதன் பெயர் கவலையா என்று யோசிக்கிறேன். சாரன் என்னை வந்தடைந்த கணத்திலிருந்து கடமையென நான் எண்ணி எடுத்து வைத்திருந்த ஒன்றனைத் தவிர வேறு எதையும் நினைப்பதில்லை. நான் தயாராவது என்று ஒன்றில்லை என்றாலும் அவன் தயாராக வேண்டும். அவனை ஆயத்தமாக்குவதே என் இறுதிப் பணியாக இருக்குமென்று தோன்றியது. நான் அதர்வன். இல்லாது போவதற்கு முன்பாக இருந்து நிறைவேற்றியாக வேண்டியது பற்றிய நினைவுகளில் என்னைக் கரைத்துக்கொண்டிருக்கிறேன்.
அவன் நகர்வலம் சென்றிருந்தபோது ராஜாங்க அதிகாரி ஒருவரின் கரத்தில் சில பிராமணர்கள் காப்பு அணிவித்து வழியனுப்பி வைத்த காட்சியைக் காண நேர்ந்தது அவன் மனத்தை இடைவிடாமல் அரித்துக்கொண்டிருந்தது. நான் உட்புகுந்து கண்டறிய வேண்டிய அவசியமே இல்லாமல் அவனே அதனைக் குறித்து என்னிடம் நான்கைந்து முறை கேட்டான்.
Add Comment