67. பெரிய மனிதர்களுக்கான பழம்
மே 7 அன்று இரவு, காந்தி ‘மெட்ராஸ் மெயில்’ என்கிற ரயிலில் பெங்களூருக்குப் புறப்பட்டார். ஆனால், அவருடைய வழக்கமான மூன்றாம் வகுப்பில் இல்லை, முதல் வகுப்பில்.
ரயிலில் எப்போதும் மூன்றாம் வகுப்பில்தான் செல்வேன் என்கிற தன்னுடைய பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு காந்தி முதல் வகுப்பில் பயணம் செய்யக் காரணம், அவரோடு பெங்களூருக்கு வந்த ஜி. ஏ. நடேசனுக்கு அப்போது உடல்நிலை சரியில்லை. அதனால், அவர் சிரமமில்லாமல் வசதியாகப் பயணம் செய்யவேண்டும் என்பதற்காகக் காந்தியும் முதல் வகுப்பில் வரச் சம்மதித்தார்.
ஆனால், இந்தத் திடீர் வசதி அவரைச் சிறிதும் ஈர்த்ததாகத் தெரியவில்லை. மறுநாள் அவர் பெங்களூரிலிருந்து கிளம்பும்போது, அங்குள்ள தொண்டர்கள் ‘நீங்கள் ஏன் மீண்டும் முதல் வகுப்பில் பயணம் செய்யக்கூடாது?’ என்று கேட்டிருக்கிறார்கள். அதற்குக் காந்தி சொன்ன பதில், ‘வேண்டாம். நீங்கள் என்னை வற்புறுத்தி முதல் வகுப்பில் ஏற்றினாலும், அடுத்த நிலையத்தில் இறங்கி மூன்றாம் வகுப்புக்கு மாறிவிடுவேன்.’
இப்போது ‘பெங்களூரு’ என்று அழைக்கப்படுகிற கர்நாடக மாநிலத்தின் தலைநகரம் அன்றைக்குப் ‘பெங்களூர்’ என்று அழைக்கப்பட்டது. அப்போது அது ஆங்கிலேயர்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை, மைசூரு (அப்போதைய பெயர் ‘மைசூர்’) அரசருடைய ஆட்சியின்கீழ் இருந்தது. கர்நாடகம் என்கிற மாநிலமும் அப்போது இல்லை. அது இந்திய விடுதலைக்குப்பிறகுதான் உருவானது.
சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் வழியில் ‘பங்காரப்பேட்டை’ என்ற ஊர் இருக்கிறது. அங்கு வசிக்கும் குஜராத்தி மக்கள் காந்தியை வரவேற்றுப் பெருமைப்படுத்த விரும்பினார்கள். பங்காரப்பேட்டை ரயில் நிலையத்திலேயே நடைபெற்ற இந்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு தன்னுடைய பெங்களூருப் பயணத்தைத் தொடர்ந்தார் காந்தி.
Add Comment