68. கடவுள் அவர்களோடு இருக்கிறார்
‘கடவுள் பெயரைச் சொல்லிப் பாடும் பக்தர்களே,
இந்த மூடப்பட்ட கோயிலின்
தனிமையான இருட்டு மூலையில்
நீங்கள் யாரை வழிபடுகிறீர்கள்?
கண்களைத் திறந்து பாருங்கள்,
உங்கள் கடவுள் உங்களுக்குமுன்னால் இல்லை என்பதை உணருங்கள்.
அவர் வயலில் உழுகின்ற விவசாயியுடன் இருக்கிறார்,
கல்லை உடைத்துப் பாதை அமைக்கின்ற தொழிலாளியுடன் இருக்கிறார்,
அவர்களுடைய ஆடைகள் கிழிந்துள்ளன,
அவற்றில் அழுக்கு படிந்துள்ளது.
ஆனாலும் என்ன?
கடவுள் அவர்களோடு இருக்கிறார்.
அதனால்,
நீங்கள் இந்தப் புனிதச் சின்னங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு,
தூசு படிந்த களத்துக்கு வாருங்கள்,
வியர்வை சிந்திப் பாடுபடுங்கள்.’
பெங்களூரில் கோகலேவின் படத்தைத் திறந்துவைப்பதற்காக வந்திருந்த காந்தியின்முன்னால் படிக்கப்பட்ட இந்தக் கவிதை வரிகள், தாகூரின் புகழ் பெற்ற ‘கீதாஞ்சலி’ என்ற நூலில் உள்ளன. இந்த வரிகளைக் கேட்டதும், காந்தி தன்னைத் தானே சுய அலசல் செய்துகொள்ளத் தொடங்கிவிட்டார்.
‘அழுக்கான, கிழிந்த ஆடைகளை அணிந்திருப்பவர்களோடுதான் கடவுள் இருக்கிறார் என்று இந்த அழகான கவிதை சொல்கிறது. அதனால், நான் என்னுடைய ஆடைகளை உற்றுப் பார்க்கிறேன். அவை அழுக்காக இல்லை, கிழிந்திருக்கவும் இல்லை. அதனால், கடவுள் எனக்குள் இல்லை.’
‘வெறும் ஆடைகளை வைத்து இதைத் தீர்மானிக்கமுடியாது என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், கடவுள் நமக்குள் இருக்கிறார் என்பதற்கான மற்ற தேர்வுகளிலும் நான் தோற்றுப்போவேன். நீங்களும் தோற்றுப்போவீர்கள்.’
Add Comment