75. நாவடக்கம், எளிமை, சுதேசி
சாப்பிடத்தான் வாழ்க்கை என்பது ஒரு நம்பிக்கை. வாழத்தான் சாப்பாடு என்பது இன்னொரு நம்பிக்கை. இதில் காந்தி இரண்டாவது கட்சி.
மதங்களுக்கு இணையாக, சொல்லப்போனால் அவற்றைவிடக் கூடுதலாகக் காந்தி உணவுப் பழக்கங்களைப்பற்றி ஆராய்ந்திருக்கிறார், பரிசோதனைகளைச் செய்திருக்கிறார், அவற்றின் அடிப்படையில் தனக்கென்று ஓர் உணவுமுறையை வகுத்துக்கொண்டிருக்கிறார், அதைப் பிறருக்கும் வலியுறுத்தியிருக்கிறார். அறிவியல் வல்லுனர்களும் மருத்துவர்களும் இந்த விஷயத்தில் அவரோடு சிறிதளவு ஒத்துப்போனார்கள், பெருமளவு ஒத்துப்போகவில்லை. ஆனால், காந்தி அதைப்பற்றிக் கவலைப்படவில்லை, அவர்களுடைய சான்றளிப்பை எதிர்பார்க்கவும் இல்லை.
அதனால், சத்தியாக்கிரக ஆசிரமத்தின் நான்காவது உறுதிமொழி, நாக்கைக் கட்டுப்படுத்துவது, நாட்டுக்குச் சேவை செய்யும்படி உடலை உறுதியுடன் வைத்துக்கொள்வதற்காகமட்டும் சாப்பிடுவது, அதற்குமேல் ருசிக்காக எதையும் சாப்பிடாமலிருப்பது.
இப்படி உணவைக் கொஞ்சங்கொஞ்சமாக எளிமைப்படுத்தினால், தூய்மைப்படுத்தினால், அதாவது, ஆசையைத் தூண்டக்கூடிய உணவுகளைக் குறைத்தால், பிரம்மச்சரியத்தைப் பின்பற்றுவது எளிதாகும் என்பது காந்தியின் நம்பிக்கை. அவருடைய ஆசிரமத்தின் சமையல் பழக்கங்களும் இதற்கு ஏற்ப அமைந்தன.
சத்தியாக்கிரக ஆசிரமத்தில் எல்லாருக்கும் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு உண்டு. ஆனால், எப்போதும் எளிய உணவுதான். மிளகாய் முற்றிலும் கிடையாது. உணவில் உப்பு, மிளகு, மஞ்சள் நீங்கலாக எந்த மசாலாப் பொருட்களும் சேர்க்கப்படாது. பால், தயிர், வெண்ணெய், நெய் போன்றவை பிரம்மச்சரிய வாழ்க்கைக்கு எதிரானவை என்பதால் அவை இயன்றவரை தவிர்க்கப்படும், எப்போதாவது சேர்க்கப்பட்டாலும் மிகக் குறைந்த அளவில்தான் சேர்க்கப்படும். பழங்களும் உலர்பழங்களும் நிறையக் கிடைக்கும்.
Add Comment