76. அச்சமின்மையும் தீண்டாமை எதிர்ப்பும்
‘சிறுவயதில் நான் ஒரு கோழையாக இருந்தேன்’ என்கிறார் காந்தி.
அப்போது அவருக்குத் திருடர்கள்மீது அச்சம், பேய், பிசாசுகள்மீது அச்சம், பாம்புகள்மீது அச்சம், இருட்டு என்றால் அச்சம். அதனால், இரவில் வீட்டை விட்டு வெளியில் வரவே மாட்டார். தன்னுடைய அறைக்குள் இருக்கும் இருட்டுகூட அவருக்கு அச்சத்தைத் தரும். அதனால், விளக்கைப் போட்டுக்கொண்டுதான் உறங்குவார்.
‘அந்த வயதில் என் மனைவி என்னைவிடத் துணிச்சலானவளாக இருந்தாள்’ என்று நினைவுகூர்கிறார் காந்தி, ‘அவளுக்குப் பாம்பு, பிசாசு, இருட்டு என எதைப் பார்த்தும் பயம் இல்லை. இருட்டில் எங்கு வேண்டுமானாலும் போவாள்.’
காந்தியின் இந்த அச்சங்களையெல்லாம் அவருடைய நண்பர் ஒருவர் அறிந்திருந்தார். அவர் காந்தியை மெல்ல மூளைச்சலவை செய்ய முயன்றார், ‘உன்னைப்போல் நான் எதைப் பார்த்தும் அஞ்சுவதில்லை. ஏன் தெரியுமா? நான் இறைச்சி உண்கிறேன். நீயும் என்னைப்போல் இறைச்சி உண்டால் துணிச்சலானவனாகிவிடுவாய்’ என்றார்.
அந்த நண்பர்(?) சொன்னதைக் காந்தி அப்படியே நம்பிவிட்டார், ‘என் மனைவி இறைச்சி உண்பதில்லையே. அவள் எப்படி என்னைவிடத் துணிச்சலுடன் இருக்கிறாள்?’ என்று எதிர்க்கேள்வி கேட்கக்கூட அவருக்குத் தோன்றவில்லை.
Add Comment