78. பிள்ளையார் சுழி
சத்தியாக்கிரக ஆசிரமம் தொடங்கப்பட்ட அடுத்த நாள் (மே 21) நானாலால் தல்பத்ராம் கவி என்ற புகழ் பெற்ற குஜராத்திக் கவிஞர் காந்தியைச் சந்தித்துப் பேசினார்.
அன்றைக்கு நானாலால் தன்னிடம் எதைப்பற்றிப் பேசினார் என்று காந்தி குறிப்பிடவில்லை. ஆனால், பின்னர் ஜூலை மாதத்தில் நானாலால் தன்னுடைய குடும்பத்தினருடன் வந்து காந்தியை மீண்டும் சந்தித்திருக்கிறார். அதன்பிறகு, 1919ம் ஆண்டு காந்தியின் ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு ‘குஜராத்னோ தபஸ்வி’ என்ற தலைப்பில் அவரைப் புகழ்ந்து ஒரு கவிதை எழுதினார் நானாலால். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, நானாலாலுக்குத் தொடக்கத்திலிருந்தே காந்தியின் சமூக, அரசியல் முறைகளில் ஈர்ப்பு வந்திருக்கவேண்டும் என்று ஊகிக்கலாம்.
ஆனால், 1921க்குப்பிறகு, நானாலால் காந்தியை விமர்சித்துப் பேசத் தொடங்கினார். காந்தி வழக்கம்போல் அவருடைய புகழ்ச்சியை எண்ணி மகிழவும் இல்லை, விமர்சித்தபோது வருந்தவும் இல்லை.
நானாலால் காந்தியைச் சந்தித்த அதே நாளில் காந்திக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. தன்னுடைய நோயைத் ‘தீவிரமான நுரையீரல் வீக்கம்’ என்று அழைக்கிறார் காந்தி. ஆனால், அச்சுறுத்துகிற பெயரைக் கொண்ட இந்த நோய்க்கு அவர் எந்தச் சிகிச்சையும் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை, அது ஓரிரு நாட்களில் சரியாகிவிட்டது என்கிறார்.
முந்தைய ஆண்டு காந்தி லண்டனில் தங்கியிருந்தபோது அவருக்கு நுரையீரல் புண் ஏற்பட்டிருந்தது. அவர் இந்தியாவுக்கு வந்தபிறகு இது ஓரளவு கட்டுப்பட்டிருந்தது. ஒருவேளை, அந்த நோய் இப்போது மீண்டும் தலைகாட்டியிருக்கலாம்.
Add Comment