78. குறுவாள்
அகங்காரம் சீண்டப்படும்போது மனித குலம் சிந்திக்கத் தவறுகிறது. சிந்தனை பிசகும் மனம் மிருக குணம் கொள்கிறது. கொன்று தின்பதொன்றே மிருகத்தின் தருமம். மிருகத்தின் தருமத்தை மனித குலம் ஏற்கும்போது அகங்காரம் தணிக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் மிருகமான தருணத்தின் அவலத்தைக் காலமெல்லாம் சுமந்துதான் தீர வேண்டும். வெட்கமின்றி அதையும் சுமக்கத் தயாராகத்தான் எல்லோரும் இருக்கிறார்கள். அகம் அசுத்தமாவது குறித்து ஒன்றுமில்லை.
அவர்கள் போகட்டும் என்று குத்சன் சொன்னது சரியானதே என்று எனக்குத் தோன்றியது. பசித்த உதரம் தானேதான் இரை கேட்கும். போதுமென்று எழுந்துவிடுவோரை இழுத்து அமர்த்தித் திணிக்க இயலாது. வேதங்கள் உள்பட அனைத்துமே சாதாரண அறிவு என்று அங்கீரசன் ஒருமுறை சொன்னான். ஆனால் சாதாரண அறிவின் துணையைக் கொண்டுதான் உயர்ந்த அறிவின் வாயிலைத் திறக்க முடியும். அழிவற்ற பிரம்மத்தை அறிய உதவும் அறிவொன்றே உயர்ந்தது.
இதனைப் புரிய வைக்காமல் எந்நாளும் நான் வகுப்புகளைத் தொடங்கியதில்லை. பிள்ளைகளுக்குப் புரியும். பெற்றவர்களின் சிக்கலுக்கு அவர்களது வாழ்க்கை இரையாவதை புத்தியுள்ள ஒருவன் சுட்டிக்காட்டத்தான் செய்வான். அதனால்தான் குத்சன் சொன்னதை நான் சரியென்று கருதினேன். ஆனால் வித்ருவின் பிராமணர்கள் கொதித்துப் போயிருந்தார்கள். ஒரு சூத்திரன் தங்களை விமரிசிப்பதா என்பது அவர்களது அகங்காரத்தின் ஊற்றுக்கண்.
‘ராஜனே, அந்நீசனை வெட்டிச் சாய்க்க உத்தரவிடுங்கள்’ என்று அவர்கள் ஆவேசமாகக் கூக்குரலிட்டார்கள்.
Add Comment