இந்த வருடத்தின் முதல் நாளே கொண்டாட்டத்தோடு தொடங்கியது. புதிய தலைமுறை டிஜிடல் இதழில் என்னுடைய குறுநாவல் ‘சக்ரவியூஹம்’ ஜனவரி ஒன்றாம் தேதி முதல் வெளிவந்தது. பல புதிய வாசகர்கள், தீவிர விமர்சனங்கள் எனப் பல புதிய திறப்புக்களைக் கொடுத்தது. பிரபலமான ஓர் ஊடகத்தில் எழுதுவதன் பலனை நன்கு புரியவைத்தது.
அமீரகத்தில், ரியல் எஸ்டேட் துறையில் பணிபுரியும் பெண்மணி ஒருவர் குறுநாவலின் கடைசி அத்தியாயத்தின் ஓப்பன் க்ளைமாக்ஸைக் கடிந்து தொலை பேசினார். ’எப்படிங்க ஒரு முடிவு இல்லாம அவளை அந்தரத்துல நிப்பாட்டுவீங்க’ என்று கோபத்தோடு சொன்னார். முகம் தெரியாத ஒருவர் உரிமையோடும், கோபத்தோடும் என்னிடம் அப்படிப் பேசியது அதுதான் முதன்முறை. என்னுள் மட்டுமே உழன்று கொண்டிருந்த ஓர் அகவுலகு, புறத்திலும் இன்னொருவரைச் சென்று சேர்கிறது. நம்மை பாதித்த அளவுக்கு அவரையும் பாதிக்கிறது என்ற மாயச்செய்கை பெரும் அதிர்வுகளைக் கொடுத்தது.
Add Comment