பீகாரில், அப்துல் கலாம் அறிவியல் நகரம் இந்த வருடம் திறக்கப்பட்டுவிடும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாட்னாவில் அமையவுள்ளது இந்நகரம். இந்தியாவின் ஆறாவது அறிவியல் நகரம் இது.
தேசிய அளவிலான நான்கு அறிவியல் நகரங்கள் மத்திய அரசின்கீழ் இயங்கிவருகின்றன. நாட்டிலேயே பெரியதும் முதலாவதுமான கொல்கத்தா அறிவியல் நகரம் நிறுவப்பட்ட ஆண்டு 1997. தமிழகத்தின் அறிவியல் நகரம் அதற்கடுத்த ஆண்டிலேயே நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முதலாக, மாநில அரசின் முன்னெடுப்பில் மலர்ந்த அறிவியல் நகரம் என்ற பெருமையைப்பெறுவது தமிழ்நாடு அறிவியல் நகரம்தான்.
தமிழகம் அமைத்துத்தந்த பாதையில் தற்போது அடியெடுத்து வைத்துள்ளது பீகார் அரசு. இருப்பினும், தமிழகத்தைப் போலல்லாது, NCSM எனப்படும் அறிவியல் அருங்காட்சியகங்களுக்கான தேசிய மன்றத்தின் உதவியைப் பெருமளவில் பெறவிருக்கிறது இந்நகரம். இம்மன்றம், இந்திய அரசின் கலாசார அமைச்சகத்தின்கீழ் இயங்கிவருகிறது. தேசிய அறிவியல் மையங்களையும் அருங்காட்சியகங்களையும் அறிவியல் நகரங்களையும் நிர்வகிக்கும் பணி இதனுடையது.
NCSM-ன் பணிகளுள் ஒன்று, அறிவியலைக் கற்பிக்க உதவும் செயல்விளக்கக் கருவிகளையும் அருங்காட்சியகங்களுக்கான காட்சிப்பொருள்களையும் வடிவமைத்தல். முதற்கட்டமாக, இதற்கான பணியாணை NCSM-க்கு பீகார் அரசால் வழங்கப்பட்டுள்ளது. அறிவியல் கருத்துருக்களைப் புதுமையாக விளக்கும் காட்சிப்பொருள்களை இரண்டு அரங்குகளுக்கு வடிவமைத்துத்தருமாறு கோரியுள்ளது பீகார் அரசு. ஏற்கனவே, கோளரங்கத்தின் ‘Space and Astronomy’ அரங்கத்துக்கான காட்சிப்பொருள்களையும் NCSM வடிவமைத்துத்தந்துள்ளது.
Add Comment