ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 1971 கிறிஸ்துமஸ் தினத்தன்று அன்றைய கனேடியப் பிரதமர் பியேர் ட்ரூடோவிற்க்கு ஒரு மகன் பிறந்தார். அவர்தான் தற்போதைய கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. ஜஸ்டின் ட்ரூடோ அவரது தந்தையார் பிரதமராக இருந்த போது பிறந்தார் என்பதற்காக இது வாரிசு அரசியல் என்று கருதக் கூடாது. அவரது தந்தையார் கட்சித் தலைமையிலிருந்து விலகிப் பல வருடங்களுக்குப் பின்னரே ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2013 ஆம் ஆண்டு லிபரல் கட்சிக்குத் தலைவராக வந்த ஜஸ்டின் ட்ரூடோ 2015 ஆம் ஆண்டுத் தேர்தலில் அவரது தலைமையின் கீழ் அக்கட்சிக்கு அமோக வெற்றியீட்டிக் கனடாவின் பிரதமராகினார். கனடாவில் மிகவும் பிரபலமாக வயதளவில் இரண்டாவது இளம் பிரதமராகப் பதவியேற்றார். ஆனாலும் மக்கள் அவர் மீது வைத்திருந்த எதிர்பார்ப்பினைக் கடந்த ஒன்பது ஆண்டுகளில் அவரால் நிறைவேற்ற முடியவில்லை.
கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாகக் கனடாவின் பிரதமராக இருந்தாலும் அவரது பிரபலம் அவர் முதல் பதவியேற்ற காலத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்ததனைக் கனேடியத் தேர்தல் முடிவுகள் மூலம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. 2015 இல் தனிக்கட்சியாகப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது லிபரல் கட்சி. ஆனால் 2019 ஆம் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் ஐம்பது வீதத்துக்கு மேல் உறுப்பினர்கள் இல்லாததால் மற்றைய கட்சிகளின் ஆதரவோடுதான் லிபரல் கட்சி ஆட்சி அமைத்தது. மக்கள் மத்தியில் கட்சியினதும் ட்ரூடோவினதும் ஆதரவு கணிசமானளவு குறையத் தொடங்கி விட்டது என்பதற்கு இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டாகும்.
Add Comment