புலம்பெயர்ந்தோர் தினத்தில் அவர்களுக்கெனத் தனித்துவமான ரயில் பயணத்தைத் தொடங்கிவைத்தார் இந்தியப் பிரதமர். பிரவாசி பாரதிய எக்ஸ்பிரஸ். பிரவாசி என்றால் புலம்பெயர்ந்தவர்கள் என்று பொருள். புலம்பெயர்ந்தவர்களுக்காக சிறப்பு ரயில் ஒன்று தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இந்த ரயில் தனது முதல் பயணத்தை கடந்த ஒன்பதாம் தேதியிலிருந்து தொடங்கி இருக்கிறது.
இந்திய அரசானது, வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்து அந்நாட்டின் குடியுரிமை பெற்றவர்களையும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளையும் இந்திய வம்சாவளி நபர் (Person of Indian origin, PIO) என்று குறிப்பிடுக்கிறது. இவர்களுக்கு வழங்கப்படும் பிஐஓ அட்டை கடவுச்சீட்டுக்கு நிகரானது. நான்கு தலைமுறை முன்புவரை இந்தியாவில் குடியுரிமை பெற்றிருந்த முன்னோர்களைக் கொண்டிருந்த நபர்களாக இருந்தாலும் இந்த அட்டை வழங்கப்படும். அந்நபரின் கணவன் அல்லது மனைவிக்கும் இந்த அட்டையைப் பெறும் தகுதி உள்ளது. விசா, பணியுரிமம் போன்றவற்றில் இந்தியர் அல்லாதவர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் இவர்களுக்கு இல்லை.
எல்எம் சிங்க்வி தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினரை ஊக்குவிக்கவும், இந்தியாவுடன் அவர்களுக்கிருக்கும் தொடர்பை புதுப்பிக்கவும் பரிந்துரை செய்தது. அதை ஏற்றுக் கொண்ட இந்திய அரசு, 2003-ஆம் ஆண்டிலிருந்து ‘பிரவாசி பாரதிய திவஸ்’ தினத்தைக் கொண்டாடி வருகிறது.
Add Comment