1 மிதப்பு
எக்மோர் ஸ்டேஷனின் பிரதான வாயில் எதிரில் சவாரியை இறக்கிவிட்டுக் கிளம்பப் பார்த்த டிரைவரிடம், இடதுகாலைத் தார் ரோட்டிலும் வலதுகாலைப் பெடலிலும் வைத்தபடி, ‘பார்சல் புக்கிங் எங்க’ என்று கேட்டான், முரட்டுக் கதர் குர்த்தாவும் அதற்கு சம்பந்தமேயில்லாத டிராக் ஸூட்டும் அணிந்திருந்த அவன்.
பெரிய ஆள் போல ஜிப்பா தாடி மீசையோடு இருந்தாலும் முகத்தில் சிறுவன் என்று எழுதி ஒட்டியிருக்கவேண்டும், ‘சைடால உள்ள போ’ என்று பின்பக்கமாகக் கையைக் காட்டிவிட்டு, வண்டியைக் கிளப்பிக்கொண்டு போனான் டாக்ஸிக்காரன்.
ம். தான் எங்கே எதற்காகப் போய்க்கொண்டிருக்கிறோம்; எங்கிருந்து எங்கே போகப்போகிறோம் என்று தெரிந்தால் அவன் இவ்வளவு அலட்சியமாகப் பதில் சொல்லுவானா எனத் தோன்றிற்று.
நார்த் ஸ்டார் ஷூ அணிந்திருந்ததால் இரண்டு இஞ்சுகள் கூடக் கிடைத்ததில் காலைத் தரையில் நன்றாக வைத்து நிற்க முடிந்திருந்தது. தன் உயரத்திற்கும் உடல்வாகிற்கும் தோதாகத் தன் கைக்குள் இருக்கும் என்று பார்த்தே BSA SLR சைக்கிளைத் தேர்ந்தெடுத்து வாங்கியிருந்தான். ஆனால், கிடக்கப் படுக்கவைத்திருந்த ஜெயகாந்தனைப்போன்று கேரியரில் உறைபோட்ட நீள மிருதங்கம்போலிருந்த ராணுவப் பச்சை நிற உருளைப் பை, வலதுகாலைத் தூக்கிக் கீழே இறக்குகையில், நீளமும் பாரமுமாகச் சேர்ந்து தடுக்கிக் கொஞ்சம் தடுமாறச் செய்தது. பையுடன் வண்டியை அப்படியே தூக்கிப் பின்புறம் நோக்கித் திருப்பி வைக்கப் பார்த்தான். பின்பாரம் முன் சக்கரத்தைத் தூக்கியது. நடுத்தெருவில் விழுந்து கிழுந்துத் தொலைத்து மானம் போய்விடப்போகிறதே என்று உள்ளூர பயமாக இருந்தது. முன்னும் பின்னுமாகத் தள்ளி ஒருவழியாகச் சைக்கிளைத் திருப்பி எக்மோர் ரயில் நிலையத்தின் பக்கவாட்டை நோக்கித் தள்ளிக்கொண்டு போனான்.
Add Comment