உலகத்தின் உயரமான புரூஜ் கலீபா, ஏழு நட்சத்திரம் உணவகமான புரூஜ் அல் அரப் என்று பிரமாண்டத்திற்குக் குறைவில்லாத துபாயில் அதிகமான கல்விக் கட்டணம் கொண்ட கல்வி நிறுவனம் தயாராகிக் கொண்டிருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் ஜெம்ஸ் ரிசேர்ச் அண்ட இன்னோவேஷன் (GEMS RESEARCH AND INNOVATION) பள்ளியை ஜெம்ஸ் குழுவினர் திறக்கவுள்ளார்கள்.
உலகத்தின் விலை உயர்ந்த கல்வி நிறுவனங்கள் என்றால், அது எப்போதும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் “இன்ஸ்டிட்யூட் லெ ரோஸி” தான். அங்கு படிக்கும் மாணவர்கள் அன்று முதல் இன்று வரை அரசு குடும்பத்தினர் மற்றும் அரசியல்வாதிகளின் குழந்தைகள் மட்டுமே. கட்டணம் வருடத்திற்கு ஒரு லட்சம் டாலர். அதாவது எண்பத்தாறு லட்சம் ரூபாய் மட்டுமே.
ஜெம்ஸ் ரிசீர்ச் பள்ளி ஆரம்பிக்கும் போதே லெ ரோஸியின் பாதிக் கட்டணத்தை எட்டிவிட்டார்கள். இங்குப் படிக்க வேண்டும் என்றால் இரண்டு லட்சம் திர்ஹம்ஸ் இருந்தால் போதும். இதை அப்படியே நம் ஊர் காசாக மாற்றினால், கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் ரூபாய். இங்குப் படிக்க நீங்கள் ராஜா வீட்டுச் செல்லக் குட்டியாகவோ அரசியல்வாதிகளின் குழந்தைகளாக இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஆனால் கையில் காசு இருந்தால் வகுப்பறையில் ஓர் இருக்கை கண்டிப்பாகக் கிடைக்கும்.இந்தப் பள்ளியை நிறுவ உதவிய கூட்டாளிகளின் குழந்தைகளுக்கு இருபது சதவீதம் கட்டணத்தில் தள்ளுபடி இருக்கும்.
Add Comment