Home » செயற்கைக்கோள் வேட்டை
விண்வெளி

செயற்கைக்கோள் வேட்டை

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வலையமைப்புகளைச் சீர்குலைக்கச் சீன ஆராய்ச்சியாளர்கள் ஓர் உத்தியை உருவாக்கியுள்ளனர். திமிங்கிலம் தன் இரையை வேட்டையாடும் முறையில் இந்த உத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சமகாலத்தில் போர்க் காலங்களில் ஸ்டார்லிங்க் தகவல் தொடர்புச் சேவையைப் பயன்படுத்தி ஏதாவது ஒரு நாடு ஆதிக்கம் செலுத்துகிறது. ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை முடக்குவதால் இரண்டு நாடுகளின் ராணுவங்களும் சமநிலையில் போராட இது உதவும் என சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) நாளிதழ் தெரிவித்துள்ளது.

ஸ்டார்லிங்கின் பரந்து விரிந்த செயற்கைக்கோள் வலைப்பின்னல்கள் தற்போதைய போர்களில் அதிகம் பயன்படுகின்றன. தகவல் தொடர்புகள், தரவுகளை அதிவேகமாகப் பரிமாற்றம் செய்ய, ஒருங்கிணைத்தல் போன்ற செயல்களுக்கு இந்தச் செயற்கைக்கோள் வலைப்பின்னலைப் பயன்படுத்துகிறார்கள். அனைத்து போர்களிலும் இதைப் பயன்படுத்துகிறார்கள். தன்னுடைய நாட்டுக்கு எதிரான மோதலில் தைவான் இதைப் பயன்படுத்தப்போவதை கண்டறிந்துள்ளது சீனா.

செயற்கைக்கோள் இணையத் தொழில்நுட்பத்தில் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் மூலம், போரில் பாதிக்கப்பட்ட தொலைதூர பகுதிகளில் எளிதாகத் தொடர்புகொள்ள முடிகிறது. விண்வெளியில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் ஆதிக்கம் செலுத்துவதைக் கட்டுப்படுத்துவது சீனாவின் நோக்கமாக இருக்கிறது. இதன் மூலம் தைவானுடனான மோதலில் சீனா தைவானுக்கு ஜலசந்திப் பகுதியில் நெருக்கடி ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

இந்த திட்டம் வெற்றி பெற்றால் போரில் அதனுடைய எதிரி நாடுகளின் ஆதிக்கத்தை சீனா கட்டுப்படுத்தும். இராணுவத்தின் சமநிலையைத் தங்களுக்குச் சாதகமாகத் திருப்பச் சீனாவுக்கு உதவும். மேலும் எதிர்காலத்தில் நடைபெறப் போகும் போர்களுடைய வெற்றியை செயற்கை நுண்ணறிவும் விண்வெளித் தொழில்நுட்பமும் தீர்மானிக்கும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இதன் விளைவாக தங்களுக்கென சொந்தமாக செயற்கைக்கோளை நிறுவும் திட்டத்தில் தைவானும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் உள்ளன. ஸ்டார்லிங்கைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக் கொண்டிருக்கின்றன. தங்களுக்கென ஒருங்கிணைக்கப்பட்ட செயற்கைக்கோள்களை நிறுவ 2.6 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளன.

SCMP அறிக்கை, நான்ஜிங் பல்கலைக்கழகத்தின் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் பிரிவின் வு யுன்ஹுவா தலைமையிலான சீன ஆராய்ச்சிக் குழு தொண்ணூற்று ஒன்பது செயற்கைக்கோள்கள் மூலம் ஸ்டார்லிங்க்கின் ஆயிரத்து நானூறு செயற்கைக்கோள்களைப் பன்னிரண்டு மணி நேரங்களில் வீழ்த்த முடியும் என்று தெரிவிக்கிறது. இந்தச் சீனச் செயற்கைக்கோள்கள் எவ்வாறு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கலாம், முடக்கலாம் எனச் சீன கல்வி இதழான சிஸ்டம்ஸ் எஞ்சினியரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸில் விவரித்திருக்கிறது.

ஸ்டார்லிங்கின் பரவலாக்கப்பட்ட வடிவமைப்பில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் உள்ளன. குறைந்த புவிச் சுற்றுப்பாதையில் (Low Earth Orbit) தனிப்பட்ட ஒரு செயற்கைக்கோளைக் குறிவைப்பது கடினம். அதனால் செயற்கை நுண்ணறிவு அல்காரிதம்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப ஆயுதங்களைப் பயன்படுத்தி, பெரிய ஒரு பகுதியை முடக்க வேண்டும். இப்படிப் பல பகுதிகளை முடக்க வேண்டும் என அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

ஒரு பைனரி செயற்கை நுண்ணறிவு அல்காரிதத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். திமிங்கிலங்கள் உணவுக்கு இரையை வேட்டையாடும் உத்தியைக் கொண்டு இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். திமிங்கிலம் வாயிலிருந்து காற்றுக் குமிழை உருவாக்கி அதனுடைய இரைகள் உள்ள பகுதியில் வெளியிடுகிறது. ஒரு இரையை மட்டும் குறி வைத்து குமிழை வெளியிடுவதில்லை. பரந்த பரப்பில் வெளியிடுகிறது. இரைகள் குமிழை நோக்கி வரவில்லை என்றால் திமிங்கிலம் குமிழை ஊதி ஊதி இரையை நோக்கி நகர்த்துகிறது. குமிழ்ச் சுவர் அருகில் இரை சென்றுவிட்டால் இரை அதைத் தாண்டிச் செல்லமுடியாது. சில சமயங்களில் குமிழ் சுவர் இரையைச் சுற்றிப் படர்ந்துவிடுகின்றன. ஆழ்கடலில் வெளிச்சம் இருக்காது. அதனால் திமிங்கிலம் ஒலி எழுப்புகிறது. இரை சிக்கிய குமிழியை அந்த ஒலி கடக்கும் போது பிற பகுதிகளிலிருந்து மாறுபட்ட ஓர் எதிரொலி உருவாகிறது. திமிங்கிலம் குமிழுக்குள் இருக்கும் இரையின் திசையை உடனே கண்டறிந்து அதனை நோக்கிச் செல்கிறது.

இதே போலச் சீனச் செயற்கைக்கோள்கள் எதிர்மறை அலைகளை ஒருங்கிணைத்து ஆற்றலை பெருக்கி ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களைத் துல்லியமாகக் கண்டறியும் முறையை உருவாக்கியுள்ளனர். இந்த முறையில் செயற்கைக்கோளைக் கட்டுப்படுத்தும் எதிர்மறை விண்வெளியில் குறிப்பிட்ட பகுதியில் பரந்து விரிகிறது. அதனால் துல்லியமாகக் கணக்கிட்டுத் தோல்வியடையும் வாய்ப்பைக் குறைக்கிறது. விரைவாகச் செயல்பட்டு இரண்டு நிமிடங்களில் ஒரு செயற்கைக்கோளைச் செயலிழக்கச் செய்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செயற்கைக்கோள்களைச் சீர்குலைக்க பல்வேறு கருவிகளைச் சீனா ஆராய்ந்து வருகிறது. அவற்றில் உயர்சக்தி நுண்ணலை ஆயுதங்கள், திடநிலை லேசர்கள், சார்பியல் க்ளைஸ்டரான் பெருக்கி போன்றவை அடங்கும். இந்தத் தொழில்நுட்பங்கள் நம்பிக்கைக்குரியவை. ஆனாலும் செயல்பாட்டில் இருக்கும் போது ஆற்றல் தேவைகள், அதிக வெப்பமடைதல் போன்ற சவால்களும் உள்ளன. அமெரிக்கா பயன்படுத்தும் எக்ஸ்ரே லேசர் ஆயுதத்தையும் சீனா பரிசோதனை செய்கிறது.

தகவல் தொடர்பில் ஸ்டார்லிங்க் பங்களிப்புகள்

நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, ஸ்பேஸ்எக்ஸ் முயற்சியான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் ஆறாயிரத்து எழுநூற்றுக்கும் மேல் விண்வெளியில் உள்ளன. விண்வெளியில் செயல்பாட்டில் உள்ள மொத்த செயற்கோள்களில் இவை ஐம்பத்து மூன்று சதவிகிதம் ஆகும். மேலும் பல்லாயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிறுவ ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டுள்ளது.

உலகளவில் அதிவேக இணையச் சேவையை வழங்குவதில் முதலிடத்தில் ஸ்டார்லிங்க் உள்ளது. போர் நடைபெறும் உக்ரைன் பகுதிகளில் நாற்பத்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட டெர்மினல்கள் அந்நாட்டு இராணுவத்திற்கு உதவுகின்றன. சிவில் தகவல் தொடர்புகளிலும் ஸ்டார்லிங்க்கின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. ஸ்டார்லிங்க்கின் மொத்த மதிப்பு $140 பில்லியன். இணையச் சேவை செல்ல முடியாத பகுதிகள், போர், இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் ஸ்டார்லிங்க் சேவை வழங்குகிறது. ஸ்டார்லிங்கின் மலிவு வன்பொருள்கள் இராணுவங்கள், வணிகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு பயனர்களை ஈர்க்கின்றன. இருந்தபோதிலும் எலான் மஸ்கின் தனிநபர் கட்டுப்பாடு, கணிக்க முடியாத அவருடைய முடிவுகள் ஆகியவற்றால் அதிகமாக அவரைச் சார்ந்திருப்பது குறித்து கவலை எழுப்பியுள்ளார்கள் வல்லுநர்கள்.

தைவானில் ஸ்டார்லிங்க்

உக்ரைன் போரில் ஸ்டார்லிங்கின் திறமையான செயல்பாட்டில் ஈர்க்கப்பட்டது தைவான். தகவல் தொடர்பை வலுப்படுத்தவும் அந்நாட்டிற்கென பூமியின் தாழ் வட்டப்பாதையை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது தைவானிய விண்வெளி நிறுவனம். கடலுக்கடியில் உள்ள அதன் கேபிள்கள் மீதான தாக்குதலை எதிர்கொள்ளவும் தற்காத்துக்கொள்ளவும் 2022ஆம் ஆண்டு இத்திட்டத்தை அறிவித்தது. மேலும் இது வெளிப்புறத் தகவல் தொடர்புகளுக்கு முதுகெலும்பாக அமைகிறது.

கடலுக்கடியில் இருக்கும் தைவானின் கேபிள்களில் பதினைந்து கேபிள்கள் உலகளாவிய டிஜிட்டல் கட்டமைப்புடன் இணைகின்றன. பூகம்பத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதியில் அவை அமைந்துள்ளன. மேலும் அதற்கு அருகில் சீன நீர்நிலைகள் இருக்கின்றன. அதனால் சீனா அந்தக் கேபிள்களை சேதப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தைவானின் கடற்கரைக்கு அருகில் சீனக் கப்பல்கள் கேபிள்களை துண்டிப்பது மீதான மோதல் சமீபத்தில் நிகழ்ந்தது. இது டிஜிட்டல் முற்றுகைக்கான சாத்தியங்களையும் எழுப்பியுள்ளது. அதனால் தைவானுக்கு செயற்கைக்கோள் வலையமைப்பை உருவாக்குவது இன்றியமையாத தேவையாக உள்ளது.

தைவான் தனக்கென சொந்தமாக செயற்கைக்கோள் நிறுவுவதில் சில தடைகள் உள்ளன. உள்நாட்டில் ஏவுதளத் தளவாடம் இல்லை. அதனால் அதனுடைய நட்பு நாடுகளை சார்ந்துள்ள கட்டாயத்தில் தைவான் இருக்கிறது. மேலும் விண்வெளி சார்ந்த தகவல் தொடர்புகளில் குறைந்த அளவே நிபுணத்துவம் பெற்றுள்ளது . வளர்ந்து வரும் விண்வெளித் துறையில் திறமையைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்வதிலும் தக்க வைத்துக் கொள்வதிலும் சிரமங்களை எதிர்கொள்கிறது. மேலும் தைவான் ஜலசந்தியில் பதட்டம் நீடிப்பதால் அதற்குச் சவால்களைக் கடக்க வேண்டியிருக்கும்.

எதற்காக ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களைச் சீனா தாக்குகிறது?

ரஷ்யா-உக்ரைன் போரில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் உக்ரைன் இராணுவத்திற்குப் பெருமளவில் உதவியுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் விண்வெளியில் இராணுவ மயமாக்கல் தீவிரமடைந்துள்ளது. இது விண்வெளி பாதுகாப்பு குறித்து சீனாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

விண்வெளியில் தற்போது நடைபெறும் போட்டிகள், செயற்கைக்கோள்களை வலுவாகப் பாதுகாப்பதற்கான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. செயற்கைக்கோள்களைச் செயலிழக்கச் செய்யும் தொழிநுட்பங்களில் சீனாவின் முன்னேற்றம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குகிறது. ஸ்டார்லிங்க் பாதிக்கப்பட்டால் தகவல் தொடர்பு சேவையில் பல நாடுகள் பாதிக்கப்படும். அதனால் விண்வெளிப் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் உத்திகளை மேம்படுத்தவும் வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உள்ளன.

பிரபு பாலா
balamx@gmail.com

[armelse]

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்

[/arm_restrict_content]

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!