தமிழ்நாட்டிலிருந்து பாகிஸ்தானுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தது 30 தபால்களாவது சென்றுகொண்டிருந்தன. 2019ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்யும் வரை. கோபித்துக்கொண்ட பாகிஸ்தான், தபால் சேவையை நிறுத்தியது. பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் ஏறக்குறைய 5000 தமிழர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர் என்பதால், சூரியகாந்தி விதைகள், கோப்புகள் எனத் தமிழ்நாட்டிலிருந்து கொடுத்தனுப்ப எப்போதும் ஏதேனும் நிச்சயம் இருக்கும்.
1930 – 1940 வருட காலங்களில் பணி வாய்ப்புகளைத் தேடி, பல தமிழர்கள் குடும்பங்களோடு வடக்கு நோக்கிச் சென்றனர். அவர்களில் சிலர் அப்போதைய சிந்து மாகாணப் பகுதிகளில் தங்களுக்கான வாழ்வினை ஏற்படுத்திக்கொண்டனர். அதுபோக ஆங்கிலேய அரசு கராச்சி பகுதியில் பல தமிழர்களைக் கணக்கர்களாக வேலைக்கு அமர்த்தியிருந்தது. கணக்கு வழக்குகளில் தமிழர்கள் கெட்டிக்காரர்களாக இருந்ததனால் இந்த ஏற்பாடு.
இரண்டாம் உலகப்போர் முடிந்து சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்று, கிட்டத்தட்ட ஆங்கிலேயர்களின் வெளியேற்றம் முடிவாகியிருந்த சமயம். முஸ்லிம் லீக் கட்சியினர், இஸ்லாமியர்களுக்குத் தனி நாடு பிரித்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். 1930களிலேயே பக்ஸ்தான் (paksthan) என்ற பெயரை எல்லாம் முன்னிறுத்தி அவர்கள் கோரிக்கைகளை வலுவாகத் தெரியப்படுத்திவந்தனர். இந்தியக் காங்கிரஸ் தலைவர்களுக்கு இதில் உடன்பாடு இல்லையெனினும், பிரிவினை முடிவை அவர்கள் எத்தனை பிரயத்தனங்களுக்குப் பிறகும் தடுக்க முடியவில்லை.
Add Comment