ஜனவரி மாதத்தின் குளிர்ந்த நள்ளிரவு. நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தனர் மக்கள். அந்த இரவு சாதாரணமானதல்ல என்பதை அங்கிருந்த அனைவரும் உணர்ந்திருந்தனர். உடலை உறைய வைக்கும் பனி ஒரு பொருட்டல்ல. இன்னும் சில நிமிடங்களில் சாஹி ஸ்நானம் என்றழைக்கப்படும் புனித நீராடலைத் துறவிகள் நடத்தி முடிக்கப்போகும் தருணத்திற்காகக் காத்திருந்தனர். ஒன்றுகூடியிருக்கும் அனைத்துத் துறவிகளும் நதியில் இறங்கி நீராடியபிறகு இறங்கினால்தான் புண்ணியம் கிடைக்கும் என்பது அங்கே காத்திருந்த சாமானியர்களின் நம்பிக்கை. எனவே பொறுமையோடு காத்திருந்தனர் மக்கள். இது அந்த ஒரு நாளில் மட்டும் நடந்த காட்சியல்ல. சில நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து அங்கே அரங்கேறிக்கொண்டிருக்கும் காட்சி.
கங்கை யமுனை சரஸ்வதி என மூன்று நதிகளும் கூடும் திருமேனி சங்கமமான பிரக்யாராஜில் மகா கும்பமேளா நடந்துகொண்டிருக்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பூர்ண கும்பமேளா பன்னிரண்டு முறை நடந்தபிறகு இந்த மகா கும்பமேளா நடக்கும் என்பதால் இந்த வருடம் நடந்துகொண்டிருப்பது ஒருவருடைய வாழ்வில் ஒரே ஒருமுறை தான் நடக்கும். அந்தவகையில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் திருவிழாவில் கோடிக்கணக்கான மக்கள் உலகெங்கிலுமிருந்து கலந்துகொள்கிறார்கள். அதிக அளவிலான மக்கள் கலந்துகொள்ளக்கூடிய உலகின் மிகப்பெரிய ஆன்மீகத் திருவிழாவாக யுனெஸ்கோவும் இதனை அங்கீகரித்திருக்கிறது.
மகரசங்ராந்திக்கு முதல் நாளான பௌஷ் பூர்ணிமாவில் தொடங்கி மகா சிவராத்திரி வரை நாற்பத்தைந்து நாள்கள் இந்த மகா கும்பமேளா நடக்கிறது. இதில் சுமார் நாற்பது கோடி பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகெங்குமிருந்து பொது மக்களும் இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கும் அகோரிகளும் சாதுக்களும் துறவிகளும் கலந்துகொள்கிறார்கள்.
Add Comment