3 ஆதங்கம்
கன்யாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு சைக்கிளில் போகப்போகிறோம் என்பது ஒருபுறமிருக்க, சுந்தர ராமசாமியைப் பார்க்கப்போகிறோம் என்பது கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்தது. போகிறோம் என்பது உறுதியான உடனே அவருடன் ஒரு நாளாவது இருக்கவேண்டும் என்று முடிவுசெய்துகொண்டான். இந்தியாவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய காவிப் பயணத்தை முடித்துக்கொண்ட இடத்திலிருந்து இந்திய சைக்கிள் பயணத்தைத் தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றிற்று. இப்படியெல்லாம் நினைத்துக்கொள்வது கொஞ்சம் அசட்டுத்தனமாகக்கூடப் பட்டது.
ராமின் அபிராமபுரம் வீட்டில், ‘ரொம்ப சந்தோஷமா இருக்கும்போது குடிக்கணும், இல்லேன்னா கெட்டவார்த்தை பேசணும்’ என்று சுந்தர ராமசாமி மெல்லச் சிரித்தபடி சொல்ல, ராம் உள்ளே போய் பச்சை நிற கோனியாக் பாட்டிலுடன் வந்தது நினைவுக்கு வந்தது.
ரேலி 24ஆம் தேதிதான் கிளம்புகிறது என்றாலும் ஐந்தாறு நாட்கள் முன்னால் வரவேண்டியிருக்கும் என சுந்தரேசன் சொல்லியிருந்தார். சேர்த்துக்கொண்டால் போதும் என்று இருந்ததாலும் ஆள் வேறு பார்க்கக் கொஞ்சம் முசுடுபோலத் தோன்றியதாலும் ஏன் எதற்கு என்று கேட்டுக்கொள்ளவில்லை.
Add Comment