42. வருவாயும் வளரணும், சேமிப்பும் வளரணும்
ஒருவர் தன்னுடைய குறுகிய கால, இடைக்கால, நீண்ட கால நிதித் தேவைகளைப்பற்றிச் சிந்தித்துவிட்டார். அதற்கான தொகைகளையும் கணக்கிட்டுவிட்டார். இப்போது, அவர் அந்த மூன்று தேவைகளுக்காகவும் சேமிக்கத் தொடங்கவேண்டும்.
அதற்கு முன்னால் அவர் தன்னைத் தானே கேட்டுக்கொள்ளவேண்டிய ஒரு முதன்மையான கேள்வி: நான் என்னுடைய நெருக்கடி நேரத் தொகையைச் சேமித்துவிட்டேனா? இல்லையா?
நெருக்கடி நேரத் தொகையைப்பற்றி நாம் ஏற்கெனவே பேசியிருக்கிறோம். திடீரென்று ஏதோ ஒரு காரணத்தால் உங்களுடைய மாத வருவாய் பாதிக்கப்பட்டால் அடுத்த சில, பல மாதங்களுக்கு உங்களுடைய தனிப்பட்ட, வீட்டுச் செலவுகள், கடமைகள் அனைத்தையும் ஈடு செய்யக்கூடிய தொகைதான் இது. இந்தத் தொகையை நீங்கள் உங்களுக்கு உடனடியாகக் கிடைக்கக்கூடிய, மிகவும் பாதுகாப்பான ஓர் இடத்தில் சேமித்துவைத்திருக்கவேண்டும். உண்மையான நெருக்கடி வந்தாலன்றி அதைத் தொடக்கூடாது.
ஒருவேளை, நீங்கள் உங்களுடைய நெருக்கடி நேரத் தொகையை இன்னும் சேமிக்கவில்லை என்றால், உடனடியாக அதைத் தொடங்கவேண்டும். குறுகிய கால, இடைக்கால, நீண்ட கால நிதித் தேவைகளெல்லாம் தண்ணீர், சாப்பாடு என்றால் நெருக்கடி நேரத் தொகை என்பது ஆக்சிஜனைப்போன்றது. அந்தத் தொகையை ஒழுங்காகச் சேமித்து ஓரமாக எடுத்துவைக்காமல் மற்ற மூன்று வகை நிதித் தேவைகளைப்பற்றி நீங்கள் சிந்திக்கக்கூடாது.
Add Comment