இந்தியாவின் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் கடந்த சனிக்கிழமை, ஜனவரி 25ஆம் தேதியன்று காலமானார். அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக மருத்துவத் துறையில் பல சாதனைகள் செய்து, பல உயிர்களைக் காப்பாற்றியவர். தான் ஒரு கருவி மட்டுமே எனத் தன் வாழ்வைக் குறிப்பிட்டவர்.
“திருப்தி ஆயி” என்கிற தன் தந்தையின் கடைசி சொற்களை எதிரொலிக்கும் விதத்தில் தன் பணியை அமைத்துக்கொண்டவர் செரியன். குழந்தைகளுக்கும் ஏழைகளுக்கும் தான் செய்யும் சேவையில் மனநிறைவைக் கண்டடைந்தவர். ஏழு கிலோவுக்குக் குறைவான எடை கொண்ட ஒரு வயதுக் குழந்தைக்கு இவர் செய்த அறுவை சிகிச்சை அன்னை தெரசாவின் அறிமுகத்தைப் பெற்றுத்தந்தது. அக்காலகட்டத்தில் அவ்வளவு ரிஸ்கான சிகிச்சையை அதுவரை யாரும் இந்தியாவில் செய்ததில்லை. இதே போன்ற உதவி தேவைப்பட்ட மற்றொரு குழந்தையை அன்னை தெரசா, செரியனிடம் அனுப்பிவைத்தார். அன்னை தெரசாவைப் போலவே செரியனும் சேவை மனப்பான்மையுடன் இருந்தார். பணம் வாங்காமல் சிகிச்சையளித்ததோடு, குழந்தைக்குத் தேவையான மற்ற செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டார். ஈராக்கைச் சேர்ந்த இருபது குழந்தைகளுக்கு செரியன் செய்த இதய அறுவை சிகிச்சை பின்னர் ஈராக் சிறையில் இருந்த இந்தியர்கள் நால்வரின் விடுதலைக்கு வழிவகுத்தது.
Add Comment