பிரான்கோபோனி என்பது,பிரெஞ்சு மொழி பேசும் ஆண்கள்- பெண்களைக் குறிக்கும் சொல். ஐந்து கண்டங்களையும் சேர்த்து 321 மில்லியன் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள் என்கிறது பிரான்கோபோனி அமைப்பு. 1970இல் தொடங்கப்பட்டது இவ்வமைப்பு. பிரெஞ்சைத் தாய் மொழியாகவும், வழக்கு மொழியாகவும் கொண்டிருக்கும் நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் பிரான்கோபோனி அமைப்பில் சென்ற வருடம் புதுச்சேரியும் இணைந்தது.
‘நூற்றாண்டுகளாகப் பிரெஞ்சு அதிகாரம் செலுத்திய பல பகுதிகளிலும் புதுச்சேரியிலிருந்து மக்கள் சென்று வசித்துள்ளனர். அப்பகுதிகளிலிருந்து பலரும் தங்கள் சொந்தங்களைத் தேடி புதுச்சேரிக்கும் வருகின்றனர். ஆகையால் பிரான்கோபோனியின் உறுப்பினரானதன் மூலம் தன்னுடைய பிரெஞ்சு தொடர்புகளை இன்னும் பலப்படுத்திக்கொள்ள முடியும்’ என்று பேசியிருக்கிறார் நிகழ்வில் பங்கேற்ற பொதுப்பணித்துறை அமைச்சர் லக்ஷ்மி நாராயணன்.
1667ஆம் ஆண்டு சூரத்தில் தனது முதல் தொழிற்சாலையைத் தொடங்கியதன் மூலம் இந்தியாவில் தனது கணக்கை ஆரம்பித்தது பிரான்ஸ். 1669ஆம் ஆண்டு மசூலிப்பட்டிணத்தில் இன்னொரு தொழிற்சாலை, 1674இல் பிஜப்பூர் சுல்தானின் கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிச்சேரி பகுதியைக் கையகப்படுத்தி தனது காலனியாக அறிவித்தது. டச்சு மற்றும் ஆங்கிலேயர்களுடன் அவர்களுக்கு அவ்வப்போது பிராந்தியச் சண்டைகள் இருந்துகொண்டே இருந்தன. இருப்பினும் அடுத்தடுத்து காரைக்கால், யானம், மலபார் பகுதியின் மாகே, பெங்காலின் சந்தர்நாகோர் பகுதிகள் பிரஞ்சு காலனியப் பகுதிகளாக ஆயின.
Add Comment