டொனால்ட் டிரம்ப், தாம் பதவியேற்ற நாள்முதல் தேர்தல் வாக்குறுதிகளை அதிரடியாக நிறைவேற்றி வருகிறார். ‘முதலில் அமெரிக்கா பிறகுதான் மற்ற நாடுகள்’ என்ற கொள்கையில் தீவிரமாக இருக்கிறார். உலக நாடுகளுக்கு அமெரிக்கா செய்து வந்த உதவிகளை அடுத்த தொண்ணூறு நாள்களுக்கு நிறுத்தியிருக்கிறார். அமெரிக்க மக்களுக்கு ஆதாயம் இல்லாமல், அவர்களது வரிப்பணத்தைக் கண்ணை மூடிக்கொண்டு மற்றவர்களுக்கு இறைக்க மாட்டேன் என்கிறார். இன்னும் ஒருபடி மேலே போய், இது சரியான காரியம் மட்டுமல்ல. அமெரிக்க அதிபரான எனது தார்மீகக் கடமை என்றும் கூறியிருக்கிறார்.
உக்ரைன் தனி நாடானது முதல் (1991) அங்கு ஜனநாயகப் பாதையில் நாடு வளர உதவி செய்வது அமெரிக்காதான். சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனமான USAID மூலம் மற்ற நாடுகளை விட உக்ரைன் அதிகமான உதவிகளைப் பெற்று வந்தது. இதன்மூலம் மனிதாபிமான, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான நிதியுதவிகள் முப்பது வருடங்களாகத் தொடர்கின்றன. இவை அமெரிக்காவின் மதிப்பீடுகளின்படி உபயோகிக்கப்படுகின்றனவா என்று இப்போது பரிசீலிக்கப்பட இருக்கிறத. வெறும் நிதியை மட்டும் இது நிறுத்திவிடவில்லை. முன்னேற நினைப்பவர்களுக்கு ஆதரவளிக்க ஆளிருக்கிறது என்ற நம்பிக்கையையும் சேர்த்துத்தான் இந்தத் தடை அழிக்கிறது. இந்த ஞானோதயம் போர் நடக்கும் உக்ரைனில் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் என்னவென்று பார்ப்போம்.
கடந்த மூன்று வருடங்களில் 37 பில்லியன் டாலர்கள் அமெரிக்காவால் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இவற்றை விட்டால் வேறு வழியில்லை. போர் நடக்கும் பெரும்பாலான நகரங்களில் மின்சாரம் இருக்காது. ரஷ்யாவின் ஒவ்வொரு குண்டுவீச்சும் முதலில் குறிவைப்பது உக்ரைனின் ஆற்றல் கட்டமைப்புகளைத்தான். பிறகுதான் ஆயுதங்கள் இருக்குமிடத்தைத் தாக்குகின்றன. டீசல் ஜெனரேட்டர்களுக்கு ஆகும் செலவையும் போகப்போகக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆதி மனிதனுக்குத் தேவைப்பட்ட நெருப்புதான் இப்பகுதி மக்களின் முதல் தேவை. சமைக்கவும், உக்ரைனின் குளிரை எதிர்கொள்ளவும் விறகுகள்தாம் உதவுகின்றன. போர்க்களத்தில் மட்டும்தான் செயற்கை நுண்ணறிவைக் கொண்ட ஆயுதங்கள் எல்லாம் உண்டு. அதற்கான ராணுவ, ஆயுத உதவிகளுக்கெல்லாம் எந்தத் தடையுமில்லை. அதிபர் யாராக இருந்தாலும், ரஷ்யா மீது காட்டப்படும் அதிகாரத்துக்கு எந்தக் குறையும் வந்துவிடக் கூடாதல்லவா?
Add Comment