4. புகழ்பெற்ற சண்டைக்கலைகள்
i. கராத்தே
பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜப்பானின் ஒக்கினோவா பகுதியில் ஆயுதங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் தங்களுடைய தற்காப்புக்காக சீனச் சண்டைக்கலையைத் தழுவியும் ஜப்பானிய நுட்பங்களைச் சேர்த்தும் வெறுங்கைகளினால் சண்டையிடும் ‘கராத்தே’ என்னும் புதிய கலையை உருவாக்கினார்கள். கராத்தே என்னும் ஜப்பானிய வார்த்தையின் பொருள் வெறுங்கை அல்லது வெற்றுக்கை. ‘கரா’ என்றால் வெற்றிடம், ‘தே’ என்றால் கை, இரண்டும் இணைந்து கராத்தே, வெறுங்கை. கராத்தேவின் தொடக்கம் சீனச் சண்டைக்கலையிலிருந்து என்றாலும் நவீன கராத்தே முழுக்கமுழுக்க ஜப்பானிய மரபாக மாறிவிட்ட கலை.
கராத்தே கலையின் முக்கியமான ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதுகளில் ஒருங்கிணைந்த கராத்தே நெறிகளை உண்டாக்கினர். இரண்டாம் உலகப் போருக்கு முன் பல நாடுகளில் குடியேறிய ஜப்பானியர் கராத்தேவையும் அவர்கள் குடியேறிய நாடுகளில் பரப்பினர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பானின் ஒக்கினோவாவில் தங்கியிருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் கராத்தே கற்று, தாங்கள் அமெரிக்கா திரும்பியதும் பெருமளவில் அங்கு அதைப் பரவச் செய்தனர். இந்தியாவிலும் கராத்தே சண்டைக்கலை ஆர்வலர்களால் விரும்பப்பட்டது.
பரம்பரையின் அடிப்படையில் கராத்தேவில் பல பிரிவுகள் உள்ளன. ‘ஸ்டைல்’ என அழைக்கப்படும் இப்பிரிவுகள் அந்தந்த பரம்பரையை உருவாக்கிய கிராண்ட் மாஸ்டரின் பாணியில் அமைந்தவை. இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பெயர் சொன்னால் தெரியும் அளவுக்குப் புகழ்பெற்ற கராத்தே கிராண்ட் மாஸ்டர் ‘கோகென் யமாகுச்சி’. கோகென் அவருடைய பெயர், யமாகுச்சி அவருடைய பாரம்பரியப் பெயர். ஜப்பானிய மொழியில் ‘யமா’ மலையைக் குறிக்கும், ‘குச்சி’ வாசல் அல்லது வழியைக் குறிக்கும், யமாகுச்சி என்பது ‘மலையின் வாயில்’ என்னும் பாரம்பரியப் பெயர். யமாகுச்சியின் கராத்தே பரம்பரை ‘கோ-கு-ர்யூ’.
Add Comment