16. மாற்றம் ஒன்றே மாறாதது
சூழலுக்கேற்ப மாற்றங்களைச் செய்து கொள்வது எருமைகளிடம் உள்ள சிறப்புக் குணங்களில் ஒன்றாகும். எருமைகளுக்கு நீர் அத்தியாவசியமானது. அதனால் அவை இயன்றளவு நீர்நிலைகளுக்கு அருகிலேயே வாழ்வதுண்டு. மழைக்காலத்தில் நீரும் புதிதாக வளரும் தாவரங்களும் அதிகமாகக் கிடைக்குமல்லவா. ஆப்பிரிக்கக் காட்டெருமைகள் வழக்கமாக அவர்கள் வாழும் இடத்திலிருந்து புது இடங்களை நோக்கிச் செல்லும் பழக்கத்தை ஆய்வாளர்கள் அவதானித்திருக்கிறார்கள். கோடை காலத்தில் அவை மீண்டும் நிரந்தரமாக நீர் தேங்கியிருக்கும் இடங்களுக்குத் திரும்பி வந்துவிடுகின்றன.
நீர் என்பது எருமைகளுக்குக் குடிப்பதற்காக மட்டும் தேவையானதல்ல. உடல் வெப்ப நிலையைப் பேணவும் தேவைப்படுகின்றது. வெயில் அதிகமாக இருக்கும் போது எருமைகள் நிழலையும் தண்ணீரையும் தங்களது உடலைக் குளுமையாக வைத்திருக்கப் பயன்படுத்துகின்றன. தண்ணீரை அதிகம் விரும்பினாலும் அது சாத்தியமில்லாதபோது நிழலுக்குள் அதிக நேரம் ஒதுங்குவதன் மூலம் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. உணவிலிருந்து உடல் வெப்ப நிலை பேணுவது வரை தமது தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்களை மேற்கொள்ளும் தன்மை எருமைகளுக்கு இயற்கையாகவே உள்ளது.
Add Comment