காற்றாலை மின்சார அதிபதியாய் பெரும் தடபுடலாய் முதலீடு செய்ய முனைந்த அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி க்ரீன் எனர்ஜி, திடீரென்று இலங்கைக்கு கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டது.
2022ம் ஆண்டு மார்ச் மாதம் கோட்டாபய ராஜபக்சே அரசு, அதானிக்கு இலங்கையின் வடபகுதியான மன்னார் மாவட்டத்தில் காற்றாலைத் திட்டத்தை நிறுவ இணக்கம் தெரிவித்து இருந்தது. இதே ஆண்டு ஜுலை மாதமளவில் புரட்சி வெடித்து கோட்டாபய ஓடிப் போன பின்னர் பதவிக்கு வந்த ரணில் விக்ரமசிங்கே யார் எதை முதலீடு என்ற பெயரில் கூவி விற்றாலும் அத்தனையையும் தன் பாக்கட்டில் தூக்கிப் போடும் நிலைமையில் இருந்தார். ஆகவே அதானி விசயத்தில் அவர் கோட்டாபய விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். ஆனால் அதானிக்கோ சொல்லொணா சங்கடங்களும் தடைகளும் வந்து குவிந்தன.
முறையான கேள்வி மனுக் கோரல் (Tender) எதுவுமின்றி பிரதமர் மோடியின் சிபாரிசின் பேரில் வழங்கப்பட்ட இந்த ஒரு பில்லியன் டாலர் (8700 கோடி இந்திய ரூபாய்) பெறுமதியான முதலீட்டுத் திட்டத்தில் எத்தனை பேருக்கு லஞ்சம் வழங்கப்பட்டிருக்கலாம் என்று ஓர் ஊகம் வெடித்துக் கிளம்பியது. இந்த சந்தேகத்தை மெருகூட்டச் சொல்லப்படும் காரணம் வலுவானது.
அதாவது இலங்கையில் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான தம்மிக்கப் பெரேராவின் ஹேலீஸ் நிறுவனத்துக்கும் இதே மன்னாரில் ஒரு குட்டிப் பரப்பில் காற்றாலை மின்சாரத்திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது முறையான டென்டர் ஒழுங்குவிதிகளின்படி நடந்ததொன்று. ஹேலீஸ் உற்பத்தி செய்யப் போகும் மின்சாரத்தை ஒரு யுனிட்- டாலர் நான்கு சதத்திற்கு விற்பதற்கு இணக்கம் தெரிவித்து இருக்கும் நிலையில் அதானி எப்படி ஒரு யுனிட் -டாலர் எட்டுச் சதத்திற்கு விற்கலாம் என்பதுதான் முதலாவது சர்ச்சை.
Add Comment