மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான கருத்துகள் இந்தியாவை வடக்கு, தெற்கு எனப் பிரித்துப் பொதுவெளியில் மிகப்பெரிய விவாதங்கள் நடப்பதற்கான காரணமாக அமைந்திருக்கின்றன.
ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகும் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டுமென இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. ஒருவருக்கு ஒரு வாக்கு. ஒவ்வொருவருடைய வாக்கும் ஒரே மாதிரியான மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பது சட்டம் வலியுறுத்தும் அடிப்படைக் கூறுகளுள் ஒன்று. பத்து வாக்காளர்களைக் கொண்ட ஒரு தொகுதியும் ஐம்பது வாக்காளர்களைக் கொண்ட ஒரு தொகுதியும் ஒன்றே அல்ல. மாறாக முப்பது வாக்காளர்களைக்கொண்ட இரண்டு தொகுதிகளை உருவாக்க முடியுமானால் அதுதான் அரசியல் சமத்துவத்தை உருவாக்கும். இதனைக் கருத்தில்கொண்டே 1951ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கின்படி 494, 1961ஆம் ஆண்டின் கணக்கின்படி 522, 1971ஆம் ஆண்டுக் கணக்கின்படி 543 எனத் தொகுதிகளின் எண்ணிக்கை வரையறை செய்யப்பட்டன. 543 எனத் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டபோது இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 55 கோடி.
ஐம்பதுகளின் தொடக்கத்திலிருந்தே மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளை வலியுறுத்தி வந்தது மத்திய அரசு. ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டத்திலும் அதற்கான பல செயல்திட்டங்களை உருவாக்கியது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த முயற்சிகளுக்குத் தென்னிந்திய மாநிலங்கள் முழுவதுமாக ஒத்துழைத்தன.
Add Comment