தமிழ்நாடு அரசின் சார்பில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த 52 மாணவ, மாணவிகள் கடந்த பெப்ரவரி மாதம் மலேசியாவுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். இது அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் எட்டாவது கல்விப் பயணமாகும். இது மாணவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் கல்வி முறைகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக இருக்கும். மலேசியாவில் 1816 ஆம் ஆண்டு முதலே தமிழ்ப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. தமிழகத்திலிருந்து ரப்பர் தோட்டத் தொழிலாளர்களாக வந்து குடியேறியவர்களின் பிள்ளைகளுக்காகத் தொடங்கப்பட்டவை அவை.
இந்தியாவிலிருந்து இந்து மதமும் சீனாவிலிருந்து புத்தச் சமயமும்தான் ஏழாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை மலாயாவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. பத்தாவது நூற்றாண்டில் தொடங்கி அடுத்த ஐந்நூறு ஆண்டுகளில் அங்கு வலுப்பெற்றது இஸ்லாம். சுல்தான்களின் ஆதிக்கமும் வந்தது அப்போதுதான்.
பதினெட்டாம் நூற்றாண்டு வரை மலேசியாவுக்கு வந்த தமிழர்களுக்கும், அதன் பிறகு வந்தவர்களுக்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. முதலில் வந்தவர்கள் வணிகர்கள், வியாபாரிகள் பெரும்பான்மை இஸ்லாமியர்கள். அப்போதைய மலேசியச் சந்தை நன்றாக இயங்க காரணமே இந்தியர்கள்தான். அவர்களுக்குச் சந்தையின் தன்மை, வியாபார நுணுக்கங்கள் நன்றாகவே தெரிந்திருந்ததனால், ஆட்சியாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க முடிந்தது.
Add Comment