கணினித் தடயவியல்
இரண்டாயிரத்து நான்காம் வருடம். அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணப் போலீசாருக்கு ஒரு கடிதமும் சில புகைப்படங்களும் வந்தன. அனுப்பியவனின் பெயர் ஒட்டுமொத்த போலீஸ் துறையையும் கலங்கடித்தது. அவன் BTK கில்லர் என்று தனக்குத் தானே பெயர் சூட்டிக்கொண்டவன். போலீசாரைப் பொறுத்தவரை அவன் ஒரு கெட்ட கனவு. பத்தாண்டுகளாக அவர்கள் மறக்கப் போராடிக்கொண்டிருந்த கெட்ட கனவு.
எழுபத்து நான்காம் வருடம் தன்னுடைய கணக்கைத் தொடங்கியிருந்தான் BTK கில்லர். அதிலிருந்து சுமார் பதினெட்டு வருடங்கள் வெறியாட்டம் ஆடினான். போலீசாரின் கணக்கில் வந்தவை பத்துப் படுகொலைகள். கொலை என்றால் ஈவிரக்கமற்ற கொடூரக்கொலைகள். எடுத்துக்காட்டாக, பதினோரு வயதுச் சிறுமியொருத்தியை நிர்வாணமாகத் தூக்கில் தொங்கவிட்டு, அவள் துடிதுடித்துச் சாவதைப் பார்த்துக்கொண்டே சுயஇன்பம் அனுபவித்தவன் இந்த BTK கில்லர்.
BTK என்ற முன்னொட்டுக்கு Bind, Torture, Kill என்பது பொருள். கொல்வதற்கு அவன் வகுத்துக்கொண்ட படிநிலைகள் இவை. முதலில் அவன் தன்னுடைய இரையை நகர முடியாதவாறு கட்டிப்போடுவான். துப்பாக்கிமுனை அவர்களை ஒத்துழைக்கச் செய்தது. அடுத்ததாக முகத்தில் பிளாஸ்டிக் பைகளை மாட்டி இறுக்கமாகக் கட்டுவான். அவர்கள் மூச்சுத் திணறுவதைப் பார்த்துப் பாலியல் இன்பமடைவான். இது உளவியல் சார்ந்த பாலியல் நோய்களுள் ஒன்று.
Add Comment