புற்றுநோய் மருத்துவத்தில் மனிதர்களைக் காப்பாற்ற உதவும் ஒரு தொழில்நுட்பம் காண்டாமிருகத்தையும் காக்கப் பயன்படுத்தப்படுகின்றது என்றால் நம்ப முடிகின்றதா? “என்னது, இப்போ காண்டாமிருகத்துக்கு எல்லாம் கேன்சர் வருதா?” என்று யாரும் யோசிக்க வேண்டாம். பாவப்பட்ட அவ்விலங்கு எதிர் கொள்வது புற்றுநோயைவிடக் கொடிய பேரிடர். கொம்புக்காக அதன் உயிரையே விலையாய்க் கேட்கும் கானுயிர் கள்ள வேட்டை (wildlife poaching) தான் அது. மனிதர்களின் பேராசையும் மூடநம்பிக்கையுமே காண்டாமிருகம் வேட்டையாடப்படுவதற்கு காரணமாய் இருக்கின்றன.
Rhinoceros அல்லது Rhino எனப்படும் காண்டாமிருகம் கானகத்தின் கம்பீரமானப் பேருயிர். இன்று ஆப்பிரிக்கா மற்றும் ஆசியக் கண்டங்களின் சில பகுதிகளில் மட்டுமே அவை வாழ்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐந்து லட்சமாய் இருந்த அவ்வினத்தின் எண்ணிக்கை தற்போது இருபத்தெட்டாயிரத்துக்கும் குறைவாகவே இருக்கின்றது. கண்மூடித்தனமான அழித்தொழிப்புக்கு ஆட்படும் கானுயிர்களில் காண்டாமிருகமும் ஒன்று. அதற்குக் காரணம் அவற்றின் கொம்புகள்.
காண்டாமிருகத்தின் கொம்புகள் கெரடின் (Keratin) எனும் புரதத்தால் ஆனது. மனிதர்களின் நகமும் தலைமுடியும் கூட அதே கெரடினால் ஆனதுதான்.
ஆயினும் கொம்புகள் கள்ளச் சந்தையில் பெரும் மதிப்பு மிக்கவையாக இருக்கின்றன. யானைத் தந்தத்தையும் தங்கத்தையும்விட இக்கொம்புகளின் விலை அதிகம். குறிப்பாகச் சீனா, வியட்நாம் நாடுகள்தாம் அவற்றுக்கு மிகப்பெரிய சந்தையாக இருக்கின்றன.
Add Comment