ஆங்கில முறைப்படி மார்ச், ஏப்ரல் மாதங்களையும், தமிழ் முறையின்படி பங்குனி சித்திரையையும் வசந்த காலங்கள் என்று சொல்லுவதுண்டு. பொதுவாக வசந்த காலத்தினை மரம், செடி, கொடிகள் பருவமெய்தும் காலம் என்று கூறலாம். மார்கழி மாதம் பூராவும் குளிரில் நனையும் மரம், செடி, கொடிகள் தலைவனை எதிர்பார்த்திருக்கும் தலைவி போல, வெயில்காலத்திற்காகக் காத்திருக்கின்றன. மார்ச் மாதத்தின் வெயில்பட்டவுடன் பூக்கத்தொடங்குகின்றன. பூ, காயாகி, கனியாகிறது. வசந்தகாலத்தின் தலைவன் மன்மதன். மனித உயிர்களுக்கு மட்டுமல்ல, பாரபட்சமின்றி அனைத்து உயிர்களுக்கும் அவன் காதலை பகிர்ந்தளிக்கிறான். சூரியனோடு உறவாடி, இந்த காலக்கட்டத்தில்தான் முக்கனிகளில் முதன்மையான மாங்கனியும் பூக்கத்தொடங்குகிறது. மாம்பழ சீசன் வந்தாச்சி என்று வருடந்தோறும் நாம் அதை கொண்டாடி உண்கிறோம்.
மாம்பழத்தின் வரலாற்றினைக் கூர்ந்து நோக்கினால், மாம்பழத்தின் தித்திப்பினைப்போன்றதொரு ஆச்சர்யமான விஷயமாகவே அதன் தோற்றமும் வளர்ச்சியும் இருக்கிறது. கி.மு நான்காயிரம் ஆண்டிலேயே மாம்பழம் பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்கிறார்கள். இந்தியாவில் மாம்பழம் புராணக்கதைகளோடு தொடர்பில் இருப்பதினைக்கொண்டு அதன் பழமையினை உணரலாம். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலின் தலவிருட்சம் மாமரமே. இது கிட்டத்தட்ட 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என நம்பப்படுகிறது.
Add Comment