இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு 17 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார். அந்நாட்டின் கொந்தளிப்பான வரலாற்றில் இத்தனை வருட காலம் பிரதமர் பதவியில் நீடித்திருக்கும் ஒரே தலைவர் நெதன்யாகுதான். நாலாபுறமும் சுற்றியிருக்கும் எதிரி நாடுகளின் தாக்குதல்களையும் எதிர்ப்புகளையும் நெதன்யாகு எதிர்கொண்ட விதமும், ஆறு முறை பிரதமர் பதவியில் நீடிப்பதற்காக அவர் கையாண்ட அரசியல் ராஜதந்திரங்களும் எதிர்காலச் சர்வாதிகாரிகளுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
1949இல் டெல் அவிவ் நகரில் பிறந்த நெதன்யாகு, சிறு வயதில் அமெரிக்காவுக்குக் குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார். 1967இல் பதினெட்டு வயதானவுடன் இஸ்ரேலுக்குத் திரும்பி வந்து ராணுவத்தில் சிறப்பு அதிரடிப்படையில் இணைந்தார். 1973 இஸ்ரேல்-எகிப்து போர் உள்ளிட்ட பல போர்களில் பங்கேற்றுள்ளார்.
1988இல் இஸ்ரேலிய நாடாளுமன்றமான ‘கெனசெட்’ (knesset) உறுப்பினராக ‘லிகுட்’ (Likud) கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று வருடங்கள் வெளியுறவு துறை இணை அமைச்சராகவும், 1991-92இல் யிட்ஷாக் ஷமீரின் கூட்டணி அரசில் துணைப் பிரதமராகவும் பதவி வகித்தார். 1993இல் லிகுட் கட்சியின் தலைவரானார்.
அந்தக் காலகட்டத்தில் இருந்த இஸ்ரேலிய அரசாங்கம் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்தையும், மேற்குக் கரை மற்றும் காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலிய ராணுவம் விலக்கிக் கொள்ளப்படுவதையும் எதிர்த்துத் தீவிரமாகக் குரல் கொடுத்ததன் காரணமாக மக்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கினார்.
Add Comment