மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே மூன்று பாக்கெட்டுகள் வரிசையாக ஹேண்ட்பேக் ஒன்றில் இருந்தால் அது பிர்கின் ஹேண்ட்பேக் என்பதற்கு அடையாளம். சன்னமான பெல்ட் ஒன்று தனது ஸ்டைலான பக்கிளுடன் இதன் குறுக்கே அலங்கரிக்கிறது. இதன் சந்துகளிலிருந்து புறப்பட்டு பேக்கின் கைப்பிடி வளைந்து மேல்நோக்கி உயர்கிறது. அவ்வளவுதான். பேக்கிங் மீதிப் பகுதி முழுவதும் சாந்த சொரூபமாய் காட்சியளிக்கிறது. முக்கியமான ஒன்று பேக்கிங் அனைத்துப் பகுதிகளும் ஒரே கலரிலிருக்க வேண்டும். சிங்குச்சா கலரானாலும் வெளிறிப்போன கலரானாலும் ஒரே கலர் தான். அதுதான் பேஷன். இதன் விலை அதிகமில்லை. வெறும் இருபதாயிரம் டாலர்கள் மட்டுந்தான். அமெரிக்கா மட்டுமன்றி உலகம் முழுக்க பிரபலமான இந்த ஹேண்ட்பேக் வெறும் ஆயிரத்து நாநூறு டாலர்கள் என்றால் என்ன செய்வீர்கள்? இன்றே ஆர்டர் செய்துவிட மாட்டீர்கள்?
அதைத்தான் செய்யச் சொல்கிறார்கள் சீன விற்பனையாளர்கள். பேக் தயாரிக்கப் பயன்படுத்தும் தோலிலிருந்து செய்கூலி வரை தனித்தனியாக ஒவ்வொன்றின் விலையையும் பட்டியலிட்டு இதன் தயாரிப்பு விலை இவ்வளவுதான். இதை சீனாவில் உற்பத்தி செய்து உங்களிடம் விற்கின்றன அமெரிக்க நிறுவனங்கள். அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பிராண்ட் பெயர்களை மட்டும் அதில் பொதித்து, எறும்புக்கு யானை விலைவைத்து விற்கிறார்கள். இந்த உண்மைகளை வேறு வழியின்றி நாங்கள் அம்பலப்படுத்துகிறோம். இனிமேல் இந்த நடுத்தரகர்கள் தொல்லையே வேண்டாம். உற்பத்தி செய்து நாங்களே விற்கிறோம். காசு கொடுத்து எங்களிடம் நீங்களே வாங்குங்கள். இடையில் எதற்கு அமெரிக்காவுக்குக் கொடுக்க வேண்டும் இந்த வரி, வட்டி எல்லாம்?
Add Comment