தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளை நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் பதிமூன்றாவது தமிழக பாஜக தலைவர். அவ்வளவு எளிதில் தலைவர் பதவி நயினார் நாகேந்திரனுக்குக் கிடைக்கவில்லை. தகுதி இருந்தும் இரண்டு முறை தலைவர் பதவி தவறிப் போயிருக்கிறது. பல அதிருப்திச் சம்பவங்களையும் அரசியல் வாழ்வில் சந்தித்திருக்கிறார் நயினார் நாகேந்திரன்.
1960ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் பணங்குடி அருகில் தண்டையார்க் குளம் என்ற கிராமத்தில் பிறந்தார் நாகேந்திரன். இவரது தந்தை நயினார் அந்த ஊர் சுற்று வட்டாரத்தில் மதுபான பார், வாகன நிறுத்துமிடக் குத்தகை என சில தொழில்கள் செய்து வந்தார். அதனால் ஓரளவு வசதியான குடும்பம் நாகேந்திரனுடையது. பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஆரல்வாய் மொழியில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரியில் பி.ஏ பட்டப்படிப்பு படித்தார்.
பட்டப்படிப்பு முடிக்கும் தருவாயில் நாகேந்திரனின் ஜாதகத்தைப் பார்த்த ஒரு ஜோதிடர் ‘பையன் ஜாதகத்துக்கு அரசியலுக்குப் போனா நல்லா வருவான்’ என்று கூறியிருக்கிறார். ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள நயினார் பட்டப்படிப்பு முடித்தவுடன் நாகேந்திரனை அவரது தந்தை அதிமுக பிரமுகர் கருப்பசாமி பாண்டியனிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அக்காலத்தில் கருப்பசாமி பாண்டியன் அதிமுக முக்கியப் புள்ளியாக அந்தப் பகுதியில் விளங்கினார். எம்ஜிஆரிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தார்.
Add Comment