90களின் ஆரம்பத்தில் `கொலையுதிர்காலம்` என்ற தலைப்பில் சுஜாதா குமுதத்தில் ஒரு தொடர்கதை எழுதினார். கணேஷ், வசந்த் என்கிற அவரது பிரதான புனைவுப் பாத்திரங்கள் துப்பறியும் கதை அது. நகருக்கு வெளியே இருக்கும் ஒரு பண்ணை வீட்டில், திடீரென இரவில் எழுந்து நடமாடும் ஓர் ஒளியுருவம் பற்றித்தான் பிரதான வழக்கு. கதையின் போக்கில் அது `ஹோலோகிராம்` என்கிற அறிவியல் சங்கதி என்று விளக்கி விடுவார்.
தமிழுலகிற்கு ‘ஹோலோகிராம்’ என்கிற `இல்லாத ஒரு பிம்பத்தை திரையில் உருவாக்கும்` ஹோலோகிராஃபியை அறிமுகப்படுத்தியவர் அவர்தான். கதையின் ஒரு கட்டத்தில் வசந்த் சொல்லுவான் ‘ஒரு ஹோலோகிராமை கல்யாணம் பண்ணிக்கறதப் பத்தியெல்லாம் யோசிக்கவே முடியலையே பாஸ்` என்று. ஒருவேளை 30 வருடங்கள் கழித்து இப்போதைய காலகட்டத்தில், அந்த நாவல் எழுதப்பட்டிருந்தால், இந்த வரியை மறுபரிசீலனை செய்யவேண்டி வந்திருக்கும்.
ஒரு ஹோலோகிராம் கல்யாணச்செய்தி உலகின் பேசுபொருளாகி இருக்கிறது. கிண்டலாகவும், நகைச்சுவையாகவும் பகடிப்படங்கள் பகிரப்பட்டாலும், `பிம்பக்கல்யாணம்` என்கிற இந்த புதிய வஸ்து மனித குலத்தால் சற்று கவலையோடுதான் அவதானிக்கப்படுகிறது.
`Ficto Sexuality` என்று வழங்கப்படும் புனையப்பட்ட பாத்திரங்களின் மீதான காதலைப் பற்றி, தமிழர்களுக்கு சங்ககாலத்திலிருந்தே பரிச்சயம் உண்டு. `ஊனிடையாழி உத்தமனுக்கென்றே தன் உன்னித்தெழுந்த தடமுலைகள் காத்திருப்பதாக` எழுதிய ஆண்டாள்தான் தமிழில் முதல் Ficto sexuality விற்ப்பன்னர். ஆனால் ஆண்டாளுக்கே சித்திக்காத வரம், அலிசியா ஃப்ரேமிஸுக்கு (Alicia Framis) வாய்த்திருக்கிறது.
Add Comment