நம்புவதற்குச் சற்றுக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். ஒரு பாரம்பரிய வழக்கம், தொன்று தொட்டுத் தொடர்ந்த ஒரு கலாசாரம் அத்தனை சீக்கிரத்தில் எப்படிக் காணாமல் போனது என்று புருவம் உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆம். ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் வென்று ஐந்து மாதங்களும், பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பலத்துடன் வென்று மூன்று மாதங்களும் கடந்திருக்கும் நிலையில் தீவிர சிங்கள வலதுசாரி அமைப்புக்களும், சண்டித்தனமான பவுத்த மதகுருக்களும், நானிலம் போற்றும் பெயர் பெற்ற இனவாதிகளும் இன்னமும் அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கண்டனக் குரல் இல்லை, ஓர் ஆர்ப்பாட்டம் இல்லை, ஒரு தேச பக்திக் கவிதை இல்லை. இது இலங்கைக்குப் புதுசு.
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையை ஆண்ட எந்தவொரு ஆட்சியை எடுத்துக் கொண்டாலும் சரி, அது பெரும்பான்மைச் சிங்கள மக்களின் பேராதரவில் உற்பத்தியான பூகம்பமாய் இருந்தாலும் சரி வெறும் ஒரே வாரத்தில் ‘அதைச் செய், இதைச் செய்யாதே, அப்படி ஓரமாய்ப் போ, இப்படித் தள்ளி நில்லு, உனக்கு உரிமை கிடையாது, முதலில் எம்மினத்தைக் கவனி’ என்ற கோஷம் தவிர்க்க முடியாத ஒன்று. குறைந்தபட்சம் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அமைப்பாவது கிளம்பி வந்துவிடும். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசுக்கு இதுவரை அப்படியான தலைவலிகள் எதுவும் வரவில்லை. அதற்காகப் பிரச்னைகள் இல்லாமல் தேனாறும் பாலாறும் ஓடுகிறது என்று அர்த்தமில்லை. யாருமே எதிர்கொள்ளாத விநோதமான சிக்கல்களில் இருந்து சர்வதேசப் பிரச்சினைகள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோலத்தில் வரிசைகட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.
Add Comment