முறைப்படி 1975-ம் ஆண்டில் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். 1972ம் ஆண்டு மாட்சிமை பொருந்திய எலிசபெத் மகராணியை முற்றாய்ப் புறக்கணித்து ஜனநாயகக் குடியரசானதைக் காரணம் காட்டிப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மேலும் இரண்டு ஆண்டுகளாக பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடித்து இருந்தார். எதிர்க்கட்சிகளதும் சிவில் அமைப்புக்களதும் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் 1977-ம் ஆண்டில் பாராளுமன்றத் தேர்தல் நடக்குமென்று அறிவிக்கப்பட்டது.
ஸ்ரீமாவோவின் இந்த ஏழு வருட ஆட்சி, மக்களுக்குக் கொடுத்த பொருளாதாரச் சுமையை வெறும் ஒரு வரிக்குள் விபரிக்க முடியாது. டாலர் வெளியே செல்வதைத் தவிர்க்க இறக்குமதிகளை முற்றாய்த் தடை செய்து, ‘மூடிய பொருளாதாரம்’ என்ற பிரம்மாண்டமான உறையால் தேசத்தை மூடிவைக்க முயன்றார் ஸ்ரீமாவோ. கோட்டாபய ராஜபக்சே ஒரே ராத்திரியில் செயற்கைப் பசளையைத் தடைசெய்து முழு தேசத்தையும் ஒரு வழி பண்ணியது போன்ற தடலாடியான முடிவு அது. ‘எதைச் சாப்பிடுவதாய் இருந்தாலும், எதை உடுப்பதாய் இருந்தாலும் இலங்கையில் உற்பத்தி செய்திருக்க வேண்டும்.’ அவ்வளவுதான் பொருளாதாரக் கொள்கை. ‘பெட்ரோலும், டீசலும் மட்டும் மத்திய கிழக்கில் இருந்து தருவித்துக் கொள்ளலாம். தண்ணீர் ஊற்றி வாகனங்களை ஓட்ட முடியும் என்றால் அதைப் போன்ற மகிழ்ச்சி வேறு ஒன்று கிடையாது’ என்ற மனநிலையில்தான் ஸ்ரீமாவோ அப்போது இருந்தார்.
Add Comment