வீட்டிற்குத் தேவையான எல்லாமும் கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் போல, பெரும்பாலான பதிப்பகங்களில் பல்வேறு தரப்பினருக்குமான, பல்வேறு வகைப் புத்தகங்கள் கிடைக்கும். பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணும் எனக் குறிப்பிட்ட வகை நூல்களை மட்டும் தேடி அலையும் வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கென்றே சில பதிப்பகங்கள் இருக்கின்றன. சினிமா, காமிக்ஸ், சிறுவர் போன்று ஒரு குறிப்பிட்ட வகையின் மேல் சிறப்பு கவனம் செலுத்தி, அந்த வகை நூல்களை அதிகளவில் கொண்டு வருவர். அதுபோன்று இயங்கி வரும் சில பதிப்பகங்களைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
முதன்மையாகப் பெண்கள் எழுதும் நூல்களைப் பதிப்பிக்கும் ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்தின் உரிமையாளர் நிவேதிதா லூயிஸிடம் பேசினோம். (புத்தகக் காட்சி அரங்கு எண் 497,498)
2021-ஆம் ஆண்டு ஃபேஸ்புக் பக்கமாகத்தான் ஹெர் ஸ்டோரிஸ் ஆரம்பிக்கப் பட்டது. ஆண் மையமாக, ஆண்களுக்கான வெளியாக இயங்கும் இந்தச் சமூகத்தில் பெண்களுக்கான எக்ஸ்க்ளூஸிவ் தளமாக இருக்க வேண்டும் என்னும் நோக்கோடுதான் இதைத் தொடங்கினோம். நிறைய இடங்களில், தளங்களில் பெண்கள் எழுதுகின்றனர். நூல்கள் வெளியிடப் படுகின்றன. ஆனால் ஓர் ஓரமாக, பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது.
கடந்த மூன்று வருடங்களில் ஹெர் ஸ்டோரிஸில் நூற்று இருபதுக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்டு வந்திருக்கிறோம். பெரும்பான்மைப் புத்தங்கள், பெண்கள் எழுதியதுதான். ஓரிரண்டு விதிவிலக்குகளும் உண்டு. மருதன் எழுதிய பெண்ணிய வரலாற்றைச் சொல்லும் ‘தேவதைகள், சூனியக்காரிகள், பெண்கள்’ எனும் நூலை வெளியிட்டிருக்கிறோம். ராஜசங்கீதன் எழுதிய ‘காதலும் சில கேள்விகளும்’ புத்தகம் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வரவிருக்கிறது.
Add Comment