தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் அழகிய ‘நாகு’ நகரத்திற்கு இது போதாத காலம். பருத்த குவிமாடத்துடனும் (Dome) , நான்கு மினாராக்களுடனும் (Minaret) புத்தம்புதுப் பொலிவுடன் நகருக்கே அடையாளமாய்த் திகழும் ‘நாஜியாங்’ பள்ளிவாசலைக் காக்க நகரவாசிகள் திரண்டிருக்க, அவர்களுடன் ஐயாயிரம் சீன ராணுவ வீரர்கள் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ‘2020ம் ஆண்டின் நீதிமன்றத் தீர்ப்பைத்தான் நாம் அமல்படுத்தப் போகிறோம். அனுமதியை மீறிக் கட்டப்பட்ட குவிமாடத்தையும் மினாராவையும் தகர்க்க இடம் கொடுத்துவிட்டு வீடு செல்லுங்கள்’ என்கிறது சீன கம்யூனிஸ்ட் அரசு. ‘குவிமாடத்தையும், மினாராவையும் மட்டுமல்ல… மொத்த மசூதியையும் பெயர்த்து எடுக்கவே சீன அரசு தயாராகிறது. நாங்கள் ஓரங்குலம் அசையமாட்டோம். எம்மை நிம்மதியாய் இருக்கச் செய்துவிட்டு நீ அப்பாலே நகரு! ஷைத்தானே’ என்கிறார்கள் இரவு பகலாய் மசூதியின் காவலுக்கு இருப்பவர்கள். வழக்கத்திற்கு மாறான மக்களின் இந்த எதிர்ப்பின் கனபரிமாணம் ஒரு ரத்தக் களறிக்கான விதையா என்ற பதைபதைப்புடனே கழிகின்றன பொழுதுகள்.
கடந்த சனிக்கிழமை பள்ளிவாசல் வளாகத்திற்குள் புகுந்த கலகம் தடுக்கும் போலீசார் யாரையும் உள்ளேவிடாமல் வாயிலை அடைக்க முயன்றனர். வன்முறை வெடித்துச் சிதறியது. திமிறிக் கொண்டு எழுந்த மக்கள் போலீசாரைத் தாக்க இருதரப்பிலும் பலத்த காயங்கள். சிலரைக் கைது செய்து குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றது போலீஸ். மசூதியைச் சுற்றிக் கேடயமாய் இருக்கும் மக்களுக்கு ஆறாம் தேதி வரை கெடு வழங்கப்பட்டிருக்கிறது. ‘நீங்கள் செய்து கொண்டிருப்பது ஒரு கிரிமினல் குற்றம். தயவுசெய்து கீழ்ப்படியுங்கள்’ என்று ஸ்பீக்கர் கட்டிக் கொண்டு தெருவெங்கும் அலறிக் கொண்டிருக்கிறது ராணுவம்.ஆனால் இதைச் சற்றும் சட்டை செய்யாத மக்கள் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தியவாறு பாரிய மோதல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். நகரெங்கும் இணையம் முடக்கப்பட்டிருக்க,பெரும் சத்தத்தைச் செலவிட்டவாறு பறந்து கொண்டிருக்கின்றன ட்ரோன்களும் ஹெலிகாப்டர்களும்.
ட்ரோனில் உட்கார்ந்து எல்லாவற்றையும் பார்த்தது போல இருக்கிறது உங்க பதிவு! தொடருங்க!🌹
விஸ்வநாதன்
Thank you so much