கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்காவைக் கதிகலங்க வைத்திருக்கிறது சீனாவின் இந்த புதிய வெளியீடு. அமெரிக்காவுக்குச் சீனா விடுத்துள்ள ‘எச்சரிக்கை மணி’ என்று இதை அழைத்துள்ளார் அதிபர் ட்ரம்ப். அப்படி என்ன நடந்துவிட்டது?
இந்த உலகத்தை வருங்காலத்தில் ஆளப் போவது செயற்கை நுண்ணறிவு. அப்படியான துறையில் நாங்கள்தான் கில்லாடிகள். எக்காரணம் கொண்டும் இந்தத் துறையில் எங்கள் கண்டுபிடிப்புகளின் அருகில் கூட சீனா வரக் கூடாது என்று பல தடைகளை அமெரிக்கா விதித்திருந்தது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கோடி டாலர் முதலீடுகளை இந்தத் துறையில் அமெரிக்க நிறுவனங்கள் செய்தன. இப்படி இருக்கையில் அதிகம் தெரியாத ஒரு சீன நிறுவனம், அதுவரை உலகில் முதல் இடத்தில் இருந்த ஓப்பன்ஏஐயின் செயற்கை நுண்ணறிவு மாதிரியின் திறனுக்கு நிகராக ஒரு மாதிரியை திடீரென்று வெளியிட்டது. அதுவும் அதைத் திற மூல மாதிரியாக வெளியிட்டு, யார் வேண்டுமானாலும் சோதனை செய்து கொள்ளுங்கள் என்று சொன்னது அந்த நிறுவனம்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி இயற்றறிவு, முதலில் இணையத்தளமாக, பின்னர் செயலியாக வெளிவந்த போது உலகமே எழுந்து நின்று கவனித்தது. நாம் கேட்கும் கேள்விகளுக்குச் செயற்கை நுண்ணறிவு மனிதர்களைப் போலவே பதிலளிப்பதைப் பார்த்தவுடன் அதன் உலகை மாற்றக்கூடிய திறன் எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்தது. அதுவரை பெரும் நிறுவனங்களின் பொறியாளர்கள், கணித மேதைகள் மட்டுமே பயன்படுத்தி வந்த இயந்திரக் கற்றலின் திறன்களைச் சாதாரணமானவர்களும் வெறும் கேள்விகளின் வழியாகவே பயன்படுத்த முடிந்தது. தரவுகள் உருவாக்கம் என்றில்லாமல் இந்த நுட்பம் நாட்டின் பாதுகாப்பு, தொழில் உற்பத்தி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், பொருளாதாரம் என்று எல்லாத் துறைகளிலும் அதிவேக முன்னேற்றங்களைக் கொண்டுவரும் என்பதால் பெரிய நாடுகளின் அரசுகளும் இதில் தீவிரக் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள்.
Add Comment