தமிழர் தெய்வம் என்றால், முருகன். நாம் பொதுவாகக் குறிப்பிடுவது இதைத்தான். தமிழர்களுக்கென அறியப்பட்ட சமயங்கள் சிவம், விண்ணவம். குமரனை வழிபடுகின்ற குமரமாகிய கௌமாரம். சாக்தம் எனப்படுகின்ற சக்தியம். பிள்ளையாரை வழிபடுகின்ற காணாபத்யம் என்ற கணபதியம். செயினம் என்ற சமணம். இவை தவிர புத்தம் பிற்காலத்தில் தோன்றியது. கரைந்தும் போனது. சிற்சில இடங்களில் நிலவினது காளாமுகம். அவையும் மறைந்து விட்டன. சிவம் விண்ணவம் மட்டுமே நிலைத்தன.
இதை நமது கிராமப்புறங்களில் சொல்லிப் பாருங்கள். ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கிராமக் கோவில்களில் திருவிழாக்கள் நடப்பதைப் பார்க்கிறோம். அங்கே தெய்வங்கள், கோவில்கள் எதுவும் சிவம், விண்ணவ வரையறைக்குள் அடங்காது. மாரியம்மன் கோவில். அடைக்கலம் காத்தார் கோவில். எல்லைச்சாமி கோவில். இப்படியான வழக்குகளுடன் உள்ளவையாக இருக்கும். பெருங்கோயில்களுக்குச் செல்லும் பக்த கூட்டத்திற்கு இணையான பெருங்கூட்டம் கிராமக் கோவில்களிலும் உண்டு. இவ்வாறுள்ள கிராமக் கோவில்களுக்கும், சிவ, விண்ணவக் கோவில்களுக்கும் உள்ள தொடர்பு-தொடர்பின்மை எது? இவற்றைப் பற்றி ஒரளவு புரிதலாவது நமக்கு வேண்டும். அதை அறிவதற்கு வழிபாடு தோன்றியிருக்கக் கூடிய முறைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அந்தச் சிந்தனை நமக்குப் புதிய வாசல்களை திறக்கும்.
Add Comment